உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் - 30

27-4-1945 என் பேரப்பிள்ளைகள் வள்ளி, முருகன், நம்பி (ஆருரன்) ஆகியோர் தம் விடுமுறை நாள்களைக் கழிப்பதற் கென இன்று வந்தனர்.

6-5-1945 கோபி செட்டிப்பாளையம் தமிழ்ச் சங்கக் கூட்டத்தின் ரண்டாம் நாள் 'வேத உபநிடத சாரம்' எனும் பொருள் பற்றி நான் உரையாற்றினேன். என் உரை தொடங்கு வதற்கு முன்னர், திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையின் மறைவு குறித்து இரங்கல் உரைகளைச் சங்க உறுப்பினர் சிலர் ஆற்றினர். இந்தப் பெரும் தமிழறிஞர் மறைந்ததால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றி நான் பேசினேன்.

7-5-1945 மூன்றாம் நாள் கூட்டம். சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் திரு. தேவநேயப் பாவாணர் சில தமிழ்ச் சொற்களின் பிறப்பு குறித்து ஆழமான உரையாற்றினார். அவர்தம் உரையில் பொதிந்திருந்த ஆழ்ந்த அறிவும் நகைச் சுவையும் கேட்போரைப் பிணித்தன.

4-7-1945 தம் தமையனார் திரு. வி. உலகநாத முதலியா ரவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தியைத் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் சொல்லியனுப்பினார்.

12-7-1945 குடவாசல் காவிரி நீர் பாயும் வளமான வயல்களிலெங்கும் நெற்பயிர் விளைந்து நிற்கின்றது. இருப்பினும் வெய்யிலைத் தாங்க முடியவில்லை. உழைப்பாளர் கடுமையாக உழைத்தாலும் ஆண்டைகள் அவர்கட்கு உரிய வற்றைத் தருவதில்லை. அவர்கள் நன்றாக உண்பதும் உடுத்துவதும் இல்லை. கூரை வேய்ந்த குடிசைகளே எங்கும் நிறைந்துள்ளன.

19-7-1945 மறைத்திரு. அருள் தங்கையாவும் மறைத்திரு. சவரிமுத்துவும் முற்பகல் வந்தனர். சைவ சித்தாந்தம் பற்றி நெடு நேரம் உரையாடினோம்.

23-10-1945 ‘தமிழ் இந்தியா' நூலை எழுதிய திரு. ந.சி. கந்தையாப் பிள்ளை என்னைக் காண வந்தார். தாம் அண்மை யில் எழுதிய ‘நமது நாடு' எனும் நூலைக் கொடுத்து, என் கருத்தை அறிய விரும்பினார். நெடுநேரம் உரையாடினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/291&oldid=1592654" இலிருந்து மீள்விக்கப்பட்டது