உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

-30

மறைமலையம் - 30

அப்பரும் அப்பூதிகளுஞ் சாதிகுல வேறுபாடுகளையே நோக்கிக்கொண்டிருந்தனராயின் அவர்க்குள்ள ஒப்புயர் வில்லாப் பேரன்பு பழுதுபடும்; ஆதலால், உயர்ந்ததாகிய அன்பைநோக்கி இழிந்ததாகிய சாதிவேற்றுமையினை அவர் அப்பாற் படுத்தினர் அங்ஙனமே, சுந்தரமூர்த்திகளுஞ் சாதி வேற்றுமையினைப் பெரிதாக நினைந்திருந்தனராயின், தம்மோடொத்த சிவநேயச் சிறப்பும் பேரறிவும் பேரழகும் வாய்ந்த பரவையார் சங்கிலியார் என்னும் நல்லாரிணக்கத்தை இழந்த விட்டவராகல் வேண்டும்; மற்றுப்புனிதமாகிய அவருள்ளத் தெழுந்த பெருங் காதலன்போ அச்சாதி வேற்றுமையினை நுறுங்கத் தொலைத்துப் பெறற்கரிய அந்நல்லாரிணக்கத்தையே நாடிச் சென்றது. ஏனென்றால், முற்றத் துறந்த பட்டினத்தடிகளும்,

“நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ’

என்று அருளிச் செய்தன ரல்லரோ? ஒருவர்க்கு உடலும், உயிருமாய் இருக்கத்தக்கார் அவராற் காதலிக்கப்பட்டவரே யல்லாற் பிறரல்லரே. ஏனையோர் இணக்கமெல்லாஞ் சிற்சில காலமே நிலைப்பது. தாய்தந்தைய ரிணக்கம், புதல்வரிணக்கம், ஆசிரியரிணக்கம், தோழரிணக்கம், உடன்பிறந்தாரிணக்கம் முதலியன வெல்லாஞ் சிற்சில காலமேநிகழ்வதன்றி, முழுதுந் தொடர்ந்து நிகழா. மற்றுக், காதலன்பிற் சிறந்த கணவனும் மனைவியும் இணங்கும் இணக்கமோ அவர்தம் வாழ் நாளெல்லையளவும் இரவும் பகலும் பிரியாதாய்த் தொடர்ந்து நிகழுந் தன்மையதாம். அதிலும் அவர் அழகிலும் அறிவிலும் அன்பிலுஞ் சிவநேயத்திலும் மிக்கவராயிருந்தால் அவர்தம் இணக்கத்தின் மாட்சியினையும் இன்பத்தினையும் எங்ஙனம் உரைக்கேம்! எவ்வாறு புகழ்வேம்! பார்மின்கள் அன்பர்களே! சுந்தரமூர்த்திகட்கும் அவர்தம் மனைவியர்க்கும் வாய்த்த நேயமாட்சி எம்மால் அளப்பரிதாகலின் அவர் சாதிவேற்றுமை தொலைத்துக் கைக்கொண்ட அந்நேயம் எம்மனோர்க் வழிகாட்டும் மங்காப் பெருவிளக்கமாய் இருக்கற்பால தன்றோ!

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/75&oldid=1592087" இலிருந்து மீள்விக்கப்பட்டது