உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

75

ஆராய்ந்து அவற்றைப் பேருழைப்பினாலும் பெருமுயற்சி யினாலும் பயன்படுத்திவரும் மேல் நாட்டாசிரியரின் கைம்மாறு கருதா உதவியினாலன்றோ கம்பிச் செய்தியும் கம்பியில்லாச் செய்தியும் நிழலுருவும் ஒலி யெழுதியும் வானவூர்தியும் பிறவும் பெற்று அளவிறந்த நலங்களை அடைந்து வருகின்றோம்? இன்னும், எவ்வளவோ நலங்களை அடையப் போகின்றோம். ஆகவே, இவ்வுலகுடனும் இவ்வுடம்புடனும் உயிர்கட் குண்டான சேர்க்கை, அவ்வுயிர்கட்கு அறிவையும் இன்பத்தையும் மேன் மேற் பெருகச் செய்தற் பொருட்டே வந்ததா மென்பதூஉம், அதுபற்றியே மக்களும் மற்றை யுயிர்களும் இவ்வுலக வாழ்வினைத் துறந்து போக விரும்பாமல் அதன்கண் நிலை பெற்றிருப்பதற்கே விழைகின்றன ரென்பதூஉம் நினைவிற் பதிக்கற்பாலன வாகும்.

இனி, உயிர்கள் கேட்டுப்பெறும் அறிவு விளங்காமலே யிருக்கவும், அவற்றிற்குப் போந்த இவ்வுலகு உடற் சேர்க்கையின் நோக்கத்தை, ஆறறிவு வாய்ந்த மக்களாகிய நாம் ஆராய்ந்து பார்க்கத் தக்க நிலையில் இருப்பது போல, ஆறறிவிற் குறைந்த ஏனைச் சிற்றுயிர்கள் அதனை ஆராய்ந்து பார்க்கத்தக்க நிலையில் இருக்கவில்லை. மக்கட் பிறவி யெடுத்தவர்களுள்ளும் ஏற்றத்தாழ்வான பலதிறப்பட்ட அறிவுடையவர்கள் இருந்தாலும், பொதுவாக எல்லாருந் தத்தம் அறிவுநிலைக் கேற்ப இப் பிறவியின் நோக்கத்தை உணர்ந்து பார்ப்பவராயும், இப்பிறவி யால் மேன்மேல் அறிவும் இன்பமும் பெறத்தக்க வழி வகைகளை நாடி முயல்பவராயுமே இருக்கின்றனர். அறிவில்லா அணக்களின் சேர்க்கையால் உண்டான இப்பிறவி, அவ்வணுக்களின் பிரிவால் அழிந்துபோகும். அதற்குமேல் வேறொன்றும் இல்லையென்று வழக்குப் பேசும் பாழ்ங் கொள்கைக் காரர்களுங் கூட, இவ்வுடம் போடு இசைந்து இருக்கும் வரையில் தமக்கும் பிறர்க்கும் அறிவையும் இன்பத்தையும் பெருகச் செய்து கொள்வதற்கே பெரும்பாடு பட்டு வருகின்றார்கள்.

இப்போது இந் நிலவுலகம் எங்கணும் நடைபெற்று வரும் அரசியற் போராட்டங்கள் அத்தனையும் எந்த நோக்கத்தைக் காண்டு நடைபெறுகின்றன? தமக்கு மேன்மேல் அறிவும் இன்பமும் பெருகுதலை வேண்டி முனைந்து நிற்கும் ஒரு மக்கட் கூட்டத்தார், தமது முயற்சிக்கு மாறாய்த் தமக்கு இன்னல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/100&oldid=1592826" இலிருந்து மீள்விக்கப்பட்டது