உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் - 31

பாயும் படுக்கையுமாய்க் கிடக்குந் தள்ளாத கிழவர்களுங் கூடத் தம் உடம்பையும் இவ்வுலகையுந் துறந்து சாவதென்றால் நெஞ்சம் நடுநடுங்கிக் கண்ணீர் சிந்திக் கலுழ்கின்றனர். இந்நிகழ்ச்சியை யுற்று நோக்குங்கால், இப்பிறவியை எல்லாரும் மிக விரும்புவது, இஃது அறிவும் இன்பமும் பெறுதற்கு ஓர் ஒப்பற்ற கருவியாய் இருத்தல் பற்றியே யாமென்பது தெளியப்படுகின்ற தன்றோ? இவ்வுலகியற் பொருள்களைப் பகுத்தாராய்ந் துணர்தலால் நமக்கு எவ்வளவு அறிவு வளர்கின்றது! நமதறிவு வளர வளர, அதனைப் பலதுறைகளிற் புகுத்திப் பயன்படுத்தப்படுத்த, அவற்றைப் பயன்படுத்தத் தெரியாத காலங்களிற் பட்ட சொலற்கருந் துன்பங்களெல்லாம் நீங்கி இப்போது நாம் எவ்வளவு நலங்களைப் பெற்று இன்புற்று வருகின்றோம்!

நீராவியின் வல்லமையைக் கண்டு அதனைப் பயன் படுத்திய ஓர் ஆங்கிலத் துரைமகன் இவ்வுலகத்திற்கு விளைத்த நன்மைகளை எவரேனுங் கணக்கிட்டுச் சொல்லல் கூடுமோ? முற்காலத்தில் மூன்றாண்டுகள் பெருஞ்செலவு செய்து கொண்டு வழிச் சென்றாலுஞ் சென்று சேர்தற்கரிய காசிமா நகரை இக் காலத்தில் மூன்று நாட்களில் மிகச் சுருங்கிய செலவிற் சென்று சேரும்படி பேருதவி புரிவது எது? நீராவி வண்டியே யன்றோ? முற்காலத்திற் பாய் கட்டிக் கப்பலிற் கடல்தாண்டிச் சென்று இரங்கூன், மலேயா, சீனம் முதலான அயல் நாடுகளில் வாணிகம் நடாத்திய வணிகர்கள், தம் மனைவி மக்கள்பால் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு மனம் உளைந்து சென்றார்களென எம் பாட்டன் பாட்டிமார் சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஏன்? அக்கப்பலிற் சென்றவர் அவ் வயல்நாடு போய்ச் சேர்வதும் உறுதியில்லை; திரும்பி வந்து சேர்வதாயிருந்தாலும் எத்தனையோ ஆண்டுகள் செல்லும்! ஆனால், இஞ்ஞான்றே மூன்று நாட்களில் இரங்கூன் மாநகர் செவ்வனே சென்று சேரவும், பின்னும் மூன்று நாட்களில் திரும்பி இங்கே வந்து சேரவும் நமக்குப் பேருதவி புரிவது எது? நீராவிக் கப்பலேயன்றோ?

இன்னும் இங்ஙனமே, மின்னின் ஆற்றலையும் ஒலியின் இயக்கங்களையும் ஒலியின் பதிவுகளையும் ஒளியின் விரைவு ஒளியின் பதிவுகளையும் இரவும் பகலும் உற்று நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/99&oldid=1592824" இலிருந்து மீள்விக்கப்பட்டது