உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

83

இதனை யுணர்ந்து பாராமல், ஆடு மாடு கோழி கொக்கு குருவி நண்டு நத்தை மீன் முதலான சிற்றுயிர்களின் அரிய உடம்புகளை இரக்கமின்றிச் சிதைத்து அவற்றின் ஊனைத் தின்னும் வன்னெஞ்சக் கொடுஞ்செயலை இந்நிலவுலகம் எங்கணும் உள்ளார் செய்து வருதலினா லேயே அப் புன்செயல் நன்செயலாய் விடுமோ? புகலுங்கள்! புலி கரடி சிங்கம் ஓநாய் முதலான மற விலங்குகளும் ஏனைச் சிற்றுயிர்களை அங்ஙனமே இரக்கமின்றிக் கொன்று அவற்றின் ஊனைத் தின்னுகின்றன. அங்ஙனமே ஆறறிவுடைய மக்களுஞ் செய்து வருவார் களானால், அம்மற விலங்குகளுக்கும் இம்மக்களுக்கும் வேறுபாடு என்னை? ஆதலால், அறக்கொடியதொரு மறச்செயலை எல்லாருஞ் செய்கின்றனரென்று நாமுஞ் செய்து வந்தால், இக்கொடிய புன்செயலை விட்டு அருளும் அன்பும் இரக்கமும் வாய்ந்து நாம் மேனிலையேறி இப்பிறவியைப் புனிதமாக்குவது எந் நாள்? மேலும், இம்மாநிலத்துறையும் மாந்தரில் எவரோ ஒரு சிலர் ஒழிய, மற்றை யெல்லாருங் குற்ற மான எண்ணங்களும் குற்றமான செயல்களும் பொருந்தினவர் களாகவே யிருக்கின்றனர்.

மக்களிற் பொய் பேசாதவர் யாவர்? எவரும் இல்லையே. எல்லாரும் பொய் பேசுதல் கொண்டு, எவரும் பொய்பேசுதலை நீக்கவேண்டுவதில்லையெனக் கூறுவார் உண்டோ? மக்களிற் பொறாமையில்லாதவர் யாவர்? எவரும் இல்லையே. அதனால் எவரும் பொறாமையை நீக்குதல் எற்றுக்கு என்று கரைவார் உண்டோ? மக்களிற் பிறருடை மையைக் கவர்ந்துகொள்ள அவாவுறாதவர் எவருமே இல்லை. அதனால், அவாக்கொண்டு அலைக்கழிதல் விலக்கற்பாலதன்றென விளம்புவார் உண்டோ? இன்னும், மக்களிற் பிறரைப் புறங்கூறிப் பழியாதவர் எவருமே யில்லை. அதனாற், புறங்கூறுதல் கடியற்பால தன்றெனக் கழறுவார் உண்டோ? இல்லையே. எத்தகைய பொய் பேசுவாரும், எத்தகைய பொறாமையுடையாரும், எத்தகைய பேரவா மிகுந்தாரும், எத்தகைய புறங்கூற்றுரை பொழிவாரும், பிறர் பொய்பேசக் கண்டால், பிறர் பொறாமைப்படுதல் கண்டால், பிறர் அவாப்படுதல் கண்டால், பிறர் புறங்கூறக் கண்டால், அவரை ஏன் அவர் அவ்வளவு அருவருக்கின் றனர்? அவர்மேல் ஏன் அவ்வளவு சினங் கொள்கின்றனர்! அவரை

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/108&oldid=1592834" இலிருந்து மீள்விக்கப்பட்டது