உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

91

அவர்தஞ் சுற்றத்தார் ஏற்படுத்திய திருமணத்தை இறைவன் றடைசெய்து, பின்னர்ப் பாவை சங்கிலியார் வேறு குலத்தவராயினும் அவர்க்கும் நாயனார்க்கும் இடை நிகழ்ந்த காதலன்பின் றிறத்தையே வியந்து அவ்விருவரையும் அவர்க்கு மணம் பொருத்திய அருட் பான்மை, தமிழர்தங் காதன்மணச் சிறப்பை நன்கு புலப்படுத்து கின்றதன்றோ? இன்னும், சோழமன்னன் தன்மகள் அமராவதியுங் கம்பர் மகன் அம்பிகாபதியும் ஒருவரை யொருவர் உயிர்போற் காதலித்த அன்பின் பெருக்கை உணராதுபோயது எதனால்? தான் அரசன் என்னுஞ் செருக்கினாலும், அம்பிகாபதி தன்னை அண்டிப் பிழைக்கும் ஒரு புலவனின் மகன் என அவனது நிலையை இழிவாக நினைந்த நினைவினாலு மன்றோ? இங்ஙனமே, எத்தனையோ குடும்பங்கள் சுற்றத்தாரால் நேர்ந்த அன்பில்லா உடற் சேர்க்கையால் முன்னும் பாழாய்ப் போயின! இன்னும் பாழாய் வருகின்றன! தமிழரின் பண்டைக் காதன் மணந் திரும்ப உயிர் பெற்று எழுமானால், அப்போதுதான் இம்மண்ணுலக வாழ்க்கை விண்ணுலக வாழ்க்கையாய்ச் சுடர்ந்து திகழுமென்று நினைமின்கள்! இஞ்ஞான்றை அறிஞர்கள், காதல் வழிப்பட்ட கலப்பு மணத்தை அரசனே ஒப்புக்கொண்டு அதனைச் சட்டமாக்கல் வேண்டுமெனச் செய்யும் நன்முயற்சிக்குப், பண்டைக் காதன் மணத்தின் வழிவந்த தமிழ்மக்களாகிய நாம் பெரிதுந் துணையாய் நிற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

காதலன்பை ஒருசிறிதுங் கருதிப் பாராமற், செல்வத் தையும் புதல்வர்ப் பேற்றையுங் குலத்தையும் பிற வற்றையுமே மேலாகக் கருதி ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர் நடத்திவரும் பொருந்தா மணந் தமிழ் மக்களால் மிகவுங் கடியற் பாலதாகும். மேலும், மங்கைப் பருவம் எய்தாச் சிறு பெண்களை ஆடவர்க்கு மணம் பொருத்தும் பார்ப்பனரின் ஒழுகலாறும் பெரிதும் அருவருக்கற் பாலதாகும். மக்களினுந் தாழ்ந்த விலங்கினங் களுஞ் செய்யாத ஒரு செயலை, மக்களினுஞ் சிறந்த தேவராகத் தம்மைத் தாமே மதித்திருக்கும் பார்ப்பனர், இயற்கை யமைப்புக்கும் இறைவன் றிருவுளக் குறிப்புக்கும் முழு மாறாகச் செய்து வருவதில் விடாப்பிடியாய் நிற்பது எத்துணை இழிக்கத்தக்க செயலாய் இருக்கின்றது! இதனால் எத்தனை நல்ல பார்ப்பனக் குடும்பங்கள் பாழாய் விட்டன! தம் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/116&oldid=1592842" இலிருந்து மீள்விக்கப்பட்டது