உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

14. பன்மனைவியர் மணம்

னி, நந்தமிழ் மக்கள் வாழ்க்கையிற் பண்டிருந்த ஓர் ஒழுகலாற்றினையும் ஒளியாமல் எடுத்துக்காட்டுவது எமது கடமையாய் இருக்கின்றது. ஓர் ஆண்மகனும் ஒரு பெண்மகளுங் காதலன்பிற் பிணிக்கப்பட்டே மணந்து கொண்டார்களென்று வைத்துக்கொள்வோம். இவர்கள் மணஞ் செய்துகொண்ட பின் பெரும்பாலும் ஒன்றிரண் டாண்டுகளில் ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்கின்றனர். பிள்ளையைக் கருக்கொண்ட காலம் முதல், அதனைப் பெற்று வளர்த்து, ஐந்தாண்டுச் சிறுவன் சிறுமி ஆக்கும் வரையில் தாய்க்குள்ள துன்பம் அளவிடப் படாததாகும். தாய்க்குள்ள துன்பத்தில் ஆயிரத்தில் ஒரு கூறே தகப்பனைச் சார்கின்றது. தன் மனைவியின் துன்பத்தைக் கருதிப் பாராத கணவனாயிருந்தால், அவ்வாயிரத்தில் ஒரு கூறான துன்பத்தையும் அவன் ஏன்று கொள்ள உடம்படுவதில்லை. அச்சிறு துன்பத்தைத் தான் ஏன்றுகொள்ளா தொழியினும், மகப்பெற்றுத் துன்புறுந் தன் மனைவியைத் தான் மேலுந் துன்புறுத்தாமல் இருந்தாலாவது, அஃது அவட்கு நன்மை செய்வதை ஒப்பதாகும். ஆனால், அங்ஙனம் அவள் துன்பம் உணர்ந்து நடக்குங் கணவரைக் காண்பது முயற் கொம்பாகவே யிருக்கின்றது! பிள்ளையைப் பெற்று வளர்க்கும் பெருந்துன்பத் துடன், சமயற்றொழிலும், கணவன் மாமன் மாமி மைத்துனர் உறவினர்க்காவன செய்தலும், மற்றை இல்லப்பணி எல்லாந் தானே ஆற்றியும் அல்லது ஏவலரைக் கொண்டு ஆற்றுவித்தும், வேளைதப்பிய உணவுகொண்டு அளவிற் குறைந்த தூக்கமும் உடையளாய் நீள வருந்தும் மனைவியின் நிலையறியாமல் இரவிலோ பகலிலோ அவளைக் கட்டாயப்படுத்திப் புணர்ந்து, அவள் பிள்ளை பெற்று ஓராண்டுதானுங் கழியாதிருக்கையில், அவள் மீண்டுங் கருக்கொண்டு பின்னும் ஒரு மெலிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/120&oldid=1592846" இலிருந்து மீள்விக்கப்பட்டது