உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

111

பெருங்கடமையாகப் பிழைபடக் கருதி, எத்தனையோ குடும்பத் தவர்களின் பொருள்களை யெல்லாம் பல சூழ்ச்சிகளாற் கைப்பற்றித் தம்மக்களுக்குச் சேர்த்துவைத்து, அக்குடும்பத்தவர் களைப் பாழாக்குவது மல்லாமல், தம்மக்களையும் பாழாக்கி விடுகின்றனர். என்னை? "தான்தேடாப் பொன்னுக்கு மாற்று மில்லை உரையுமில்லை” என்னும் பழமொழிப்படி, புதல்வர்கள் தாம் வருந்தித் தேடாமல் தம் பெற்றோர்களாற் கிடைத்த பொருளைக் கண்டவுடனே தீயாரைத் துணைக்கொண்டு, அப்பொருளை விலைமாதர்க்குங் களியாட்டு விருந்திற்குங் குடிக்குஞ் சூதுக்கும் அழிவழக்கிற்கும் இன்னும் இவை போன்ற பல தீய செயல்கட்குஞ் செலவுசெய்து, சிற் சில ஆண்டுகளிற் செல்வமெல்லாம் இழந்து, நோயும் வறுமையுங் கொண்டு ஆண்டு முதிராமுன்னரே மாண்டு போகின்றார்கள்! இங்ஙனம் புதல்வர்க்குப் பொருள் சேர்த்துவைக்கும் எண்ணந் தலைப் பட்டபின், நந்தமிழர்கள் ஈகை யறங்களை அறவே மறந்து விட்டார்கள்! தமிழ் கற்பார்க்குந் தமிழ் நூல் வரைவார்க்கும் உதவி புரியுநரைக் காண்பது அரிதினும் அரிதாய் விட்டது! துறந்தாரையுந் துவ்வாதவரையுங் கண்ணெடுத்துப் பார்ப்ப வரும் இல்லை! அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருந்துயர் களைவார் அற்றே போயினர்! வெளியாரவாரங்களுக்கும் வறும் பட்டங் களுக்கும் வெறும் புகழுக்கும் வேண்டுமட்டும் பொருளை வாரியிறைக்குஞ் செல்வர்களே எங்கும் காணப் படுகின்றனர்! ஈரமற்ற நெஞ்சையும் எண்ணமற்ற கொடுஞ்செய் கையையுமே எங்குங் காண்கின்றோம்! பார்ப்பனரைப் பார்த்துத் தம் பெண்மக்களுக்குப் பெரும்பொருள் வரிசை கொடுத்து மாப்பிள்ளைகளை விலைக்கு வாங்குவதில் ஒருவர் ஒருவரின் முந்தி நிற்கின்றார்கள்! மணங் கூடுவாரின் மனப் பான்மையும் மனவொருமையுங் கருதிப் பார்ப்பவர் எவரையுங் காணோம்! எங்குந் தன்னயமுந் தற்பெருமையும் பொய்யும் புனைசுருட்டும் ஏமாற்றமுமே தலைவிரித்தாடு கின்றன! இவற்றைக் களைதற்கு அறமன்றஞ் சென்றால், அங்குந் தன்னயமும் பொருளவாவும் பொய்யும் புனை சுருட்டுமே தலைநிமிர்ந்து நிற்கின்றன! அறமகள் நடுவரின் காற்கீழ் மிதிபட்டுக் கிடக்கின்றனள்! பாழ்த்த இந்நிலை வேரூன்றுமானால் அஃதின்னுஞ் சிறிது காலத்தில் வளர்ந்து காழ்ப்பேறித் தமிழ் மக்களாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/136&oldid=1592864" இலிருந்து மீள்விக்கப்பட்டது