உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

  • மறைமலையம் - 31

பெரும்பாடுபட்டுத் தன் மனைவி மக்களைப் பாதுகாக்கும்படி ஏவுவதெது? அவனகத்தே இயற்கையாய் எழும் அன்பேயன்றோ? இங்ஙனம் வழிவழியே தாய் தந்தையர் தந் நலம் பாராது, தம்முயிரினும் மேலாய்த் தங் குழந்தைகளைப் பாதுகாத்துக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்துவருந் தொடர்ந்த அன்பினாலன்றோ மக்கட் பூண்டு பல கோடிக்கணக்காய்ப் பல்கி உலகமெங் கணும் நிறைந்து காணப்படுகின்றன?

இனி, இவ்வாறு தாய்தந்தைய ருதவியால் வளர்க்கப் பட்டு நடைபெறுந் தமது பிறவியின் வரலாற்றை நினைந்து பார்த்துத், தந் தாய் தந்தையர்பால் நெஞ்சங் கரைந்து அன்பும் நன்றியும் பாராட்டத் தக்கவர்களோ ஆறறிவு மிக்க மக்களேயன்றி, ஆறறிவு வாயாத விலங் கினங்கள் அல்ல. மக்களுள்ளுந் தாய் தந்தையர் செய்த நன்றியைப் பாராட் டாதவர் உளரெனின், அவரை ஆறறிவும் அன்பும் அற்ற விலங்குகளென்றோ, உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் அற்ற கருங்கற்களென்றோ கருதுதல் வேண்டும். இவ்வாறு, மக்களு யிர்கள் மட்டுமேயன்றி, இயங்கும் உயிர்கள் அத்தனையும் இப் பிறவிக்கு வந்த காலத்திலேயே தமக்குப் பசியாலும் விடாயாலும் நோயாலும் வந்த துன்பங்களைத் தாமாகவே தீர்த்துக்கொள்ள மாட்டாமல், தந் தாய்தந்தைய ருதவியாற் றீர்த்துக் கொண்டு வளர்ந்து வருதலால் மக்கள் முதன்முதல் தந் தாய் தந்தையரையே தெய்வமாக நினைந்து வணங்கி வருதல் வேண்டுமென்பது தமிழர்தம் முதற் றெய்வக் கொள்கையாம். இஃது,

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”

என்னும் ஔவையார் திருமொழியால் அறியப்படும் ஆசிரியர் திருவள்ளுவருந் தந்தாய் தந்தையரான ஆதியை யும் பகவனையும் நினைவு கூர்ந்து வணங்கும் முகத்தால் உலகிற்கெல்லாந் தாய் தந்தையரான முழுமுதற் கடவுளுக்கு வழிபாடு கூறுவான் புகுந்து,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே யுலகு'

என்னும் முதற் றிருக்குறளை அருளிச் செய்தார் என்க.

(குறள் 1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/141&oldid=1592869" இலிருந்து மீள்விக்கப்பட்டது