உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் - 31

கொடுக்க மாட்டா தவனாயின், அவன்றன் மனையாள் என் செய்வள்! அவள் வற்றிய யாக்கை யினளாய்ப் பால் வறண்டு தன் மகவுக்குப் பால் ஊட்ட மாட்டாளாய்ப் பெரிதுந் துயருறுவளன்றோ? இந் நேரத்திற் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் பெருமான் வறுமையால் நைந்து வள்ளலாகிய குமணன்பாற் சென்று பாடிய அருந்தமிழ்ச் செய்யுள் நினைவுக்கு வருகின்றது.

“ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பில்

ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் பாஅல் இன்மையிற் றோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என் மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!”

என்னும் அச்செய்யுள் வறுமை யுழந்த அப் புலவர் பெருந் தகையின் மனையாள் துயரும், அவள் ஈன்ற பசுங் குழவியின் துயரும் எத்துணை யுருக்கமாக எடுத்திசைக் கின்றது! ஆகவே, தந்தையாயினான் எவ்வளவுதான் புலமையிலும் முயற்சியிலும் மிக்கவனாயினும், அவனுக்கு உணவுப் பண்டங்கள் கிட்டா வாயின், அவன்றான் என் செய்வன்! அவன்றன் மனையாடான் என் செய்வள்! அவர்க்கு உணவுப் பண்டங்களை வருவித்துக் கொடுப் போரும், அவற்றை விளைவித்துக் கொடுப்போரும் இல்லை யாயின், அவரும் அவர்தம் மைந்தரும் மடிந்து போவது திண்ணமன்றோ? எனவே, எத்தகையவரும் பிறவுயிரினுதவி யின்றிப் பிறபொருளின் சேர்க்கையின்றி உயிர் வாழ்தல் சிறிதும் இயலாதென்பது தெற்றென விளங்கா நிற்கின்றதன்றோ?

இனி, நாம் பிறப்பதற்கு முன்னே நம்போன்ற மக்களும் நம்மிற் றாழ்ந்த சிற்றுயிர்களும் எங்ஙனம் தோன்றினர்? அவர்க்குப் பசியும் விடாயும் நீக்கப் பாலுஞ் சோறும் நீரும் எங்ஙனந் தோன்றின? அவ்வுயிர்களையும் அவ்வுணவுப் பொருள்களையும் நந் தாய் தந்தையர்கள் தாமே படைத்த வர்களா? அல்லது தாமே படைக்க வல்லவர்களா? ஒரு சிறிதும் இல்லையே. நந் தாய் தந்தையர்களை நாம் தெய்வமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/145&oldid=1592874" இலிருந்து மீள்விக்கப்பட்டது