உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

135

சிலராயினும் முதல்வனின் அவ்வடிவினைக் கண்ணாரக் கண்டிருந்தாலன்றி ஒருவரை யொருவர் அகன்று நெடுந் தொலைவில் உள்ள பல்வேறு நாடுகளில் உயிர் வாழ்ந்த அப் பல்வேறு மக்கட் பகுப்பினரும் அங்ஙனம் ஒத்து ஒருமுகமாய்க் கடவுளை ஆண் பெண் வடிவினராக வைத்து வழிபாடு ஆற்றுதல் ஆகாதென்பதூஉம் அதனால் நந் தமிழ் மூதாதை யரும் அத்துணைப் பழைய காலத்திருந்தே ஆண்டவனை அம்மையப்பர் உருவில் வைத்து வணங்கி வரலானது கடவுளின் உண்மை வடிவினைக் கண்ட மெய்யுணர்வினர் வழியராய் அவர் வருதலின் பயனேயா மென்பதூஉம் இதுகாறும் ஆராய்ந்த இவ் வாராய்ச்சியாற் புலனாக நிற்கு மென்க. இடைக் காலத்திற் றோன்றியருளிய மாணிக்கவாசகருந் திருஞான சம்பந்தருந் தாங்கண்ட கடவுண்மேற் பாடிய செந்தமிழ்த் தெய்வத் திருப்பாட்டு களிலுங் கடவுளைத் தாம் அம்மையப்பர் வடிவில் நேரே கண்ணாற் கண்டதைப் பல விடங்களிலும் எடுத்தியம்பி நெஞ்சம் கரைகின்றனர். இவற்றின் மெய்ம்மை யெல்லாம் எம்முடைய ‘சைவசித்தாந்த ஞான போதம்' என்னும் நூலிலும், 'மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்' என்னும் நூலிலுந் தக்க அகச்சான்று புறச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டி விளக்கப் பட்டிருக்கின்றன.

அங்ஙனமாயின், ஆண் பெண் பகுப்பினரா யிருக்கும் நம் மக்களிற் காணப்படும் மலமுஞ் சிறுநீரும் முடை நாற்றமும் முதலான அருவருப்புகளெல்லாம், ஆண் பெண் வடிவினனாய் இருக்கும் இறைவனிடத்தும் உண்டாம் எனப்பட்டு, இறை வனுக்கும் மக்களுக்கும் வேற்றுமை இல்லையாய் முடியுமா லெனின்; அற்றன்று. உருவம் என்னுஞ் சொல்லைக் கேட்ட வுடனே அஃது அருவருக்கத் தக்க எல்லாக் குறைபாடுகளும் உடையதாய் விடுமென முடிவுகட்டுதல், பகுத்தறிவுடையார்க்கு சையாது உருவ மெல்லாம் ஒரே தன்மையுடையதன்று. அஃது அறிவுருவம் பொருளுருவம் என இரண்டாயும், பொரு ளுருவமும் பருப் பொருளுருவம் நுண் பொருளுருவமென வேறிரண்டாயும், பருப்பொருளுருவமுந் தூயவுருவமுந் தூவாவுருவமுமெனப் பின்னும் வேறிரண்டாயும் பல தன்மையுடையதாய்த் தோன்றாநிற்கும். இவை தம்முள், அறிவுருவம் என்பது நமதறிவின்கட் டோன்றும் வடிவுகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/160&oldid=1592891" இலிருந்து மீள்விக்கப்பட்டது