உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் - 31

இவ்வுலகத்தின்கண் நம்மால் அறியப்படும், நம்மால் நுகரப்படும் பொருள்களெல்லாம் மண்ணும் நீரும் நெருப்புங் காற்றும் வெளியும் என்னும் ஐந்து பெரும் பகுப்பில் அடங்கு வனவாய் இருக்கின்றன. இவ்வுலகமும் இவ்வுலகத்தில் உலவும் நம் உடம்புகளும் எல்லாம் பொதுவாய் இவ்வைம்பெரும் பொருள்களினாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. இவ்வைந்தில் மண்ணானது நங் கண்ணாற் காணப்படும் உருவமுஞ், செவியாற் கேட்கப்படும் ஓசையும், மூக்கால் முகக்கப்படும் மணமும், நாவால் உணரப்படுஞ் சுவையுங், கையாற் பற்றப்படும் பருமனும் உடையது. நீரோ கண்ணாற் காணப்படும் உருவத் துடன் காதாற் கேட்கப்படும் ஓசையும், நாவால் அறியப்படுஞ் சுவையும், மெய்யால் உணரப்படும் நெகிழ்ந்த வடிவும் உடையது. காற்றோ தீயோ கண்ணாற் காணும் உருவுஞ் செவியாற் கேட்கும் ஒலியுங் கையால் தொட்டுணருஞ் சூடும் உடையது. கண்ணாற் காணப்படுவதன்றேனுஞ் செவியால் அறியப்படும் ஓசையும், மெய்யால் உணரப்படும் ஊறும் உடை யது. மற்று, வான்வெளியோ நம் ஐம்பொறி களால் எவ்வாற்றானும் அறியப்படாத தொன்று. இங்ஙனம் நம்பாற் பொருந்திய ஐம்பொறிகளின் வாயிலாக நாம் அறிந்தும் நுகர்ந்தும் வரும் இவ்வைம்பெரும் பொருள்களில் மண் ஒன்றே தடிப்பான பருப்பொருளாகும். நீரோ நெகிழ்ந்த இயல்பினதான பருப் பொருளாதலால் அதனை மண்ணினும், நுண்ணிய தென்று சொல்லலாம். தீயோ கட்புலனுக்குத் தெரிவதாயிருந்துங், கையிற் பிடிபடாததாய் இருத்தலின், அது நீரினும் நுண்ணிய தென்பது எல்லார்க்கும் ஒத்த முடிபேயாம். காற்றானது நமதுடம்பின் மேற்படுதலால், அதுவும் ஒருவகையிற் பருப் பொருளாக கருதத் தக்கதாயிருப்பினும், அது நமது கையாற் பிடிபடத் தக்கதாய் இல்லாமையானும் நங் கண்களுக்குப் புலனாகா மையானும் அது தீயினும் பார்க்க நுட்பமான பொருளென்றே அறியப்படுகின்றது. இனி, இடை வெளியோ ஓசையும் ஒளியும் வளியும் உலவுதற்கு இ இட மா யிருக்கும் மிக நுண்ணிய பொருளாக உய்த்துணரப் படுகின்றதே யன்றி, மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளில் எதற்கும் எவ்வாற்றானும் புலனாவதாயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/165&oldid=1592897" இலிருந்து மீள்விக்கப்பட்டது