உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் - 31

சூத்திரஞ் செய்திருத்தலால், இறைவன் இயல்பாகவே வினை செய்தலினின்று நீங்கி விளங்கிய வறிவினன் என்பதே பண்டையோர் கருத்தாதல் தெற்றென விளங்கா நிற்கின்றது. அற்றேல், வினை செய்தலுக்கும் அறிவு விளக்கத்திற்கும் மாறுபாடு வரக் காரணம் என்னை யெனின்; எத்துணை அறிவு விளக்கம் உடையாரும் பிறரைத் திருத்தப் புகுங்கால், அன்னார்க் குள்ள எடுப்பும் இறுமாப்பும் அறிவின்மையும் அழிச்சாட்டிய முங் கண்டு மனந் துன்புறா நிற்கின்றனர்; அவ்வாறு துன்புறுங் கால் அவரது அறிவும் விளக்கங் குன்றுகின்றது; அறிவு விளக்கங் குன்றவே அறியாமையுஞ் சிறிது சிறிதேயுண்டாகின்றது; அறியாமையுண்டாகவே முதல்வற்கும் அறியாமையுடைய நம் போன்ற சிற்றுயிர் கட்கம் வேற்றுமை யுமில்லையாய் ஒழிகின்றது. அங்ஙனம் இறைவனும் நம்போல் அறியாமை யுடையனாயின், அவன் இவ்வெண்ணிறந்த உலகங்களையும் அவற்றின்கண் உள்ள எண்ணிறந்த உயிர்களையும் அசை வித்தலும் அறிவித்தலும் இயலா. அதனாற், கடவுள் எத்தகைய வினையுந் தானாகவே முனைந்து செய்வான் அல்லனென்பதே பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் கண்ட முடிபாமென்று கடைப் பிடித்தல் வேண்டும்.

அற்றேல், தொல்காப்பியனார் “முனைவன் கண்டது முதல்நூலாகும்” எனக் கூறி முதல்நூல் இறைவனாற் செய்யப்பட்டதாகும் என முதல்நூல் செய்யும் வினையை அவன்மேல் ஏற்றிக்கூறிய தென்னையெனின்; இதன் கண்ணும் உள்ள சொல்லமைப்பை நுனித்து நோக்குதல் வேண்டும். முனைவன் காட்டியது எனவாதல், முனைவன் செய்தது எனவாதல் ஆசிரியர் ஓதாமற், கண்டது எனத் தன்வினை வாய்பாட்டால் ஓதிய நுட்பத்தை உற்றுணருங் கால், முதல்வன் ஏதொரு நூலுந் தானாகவே முனைந்து செய்யாதிருக்க, என்றும் ஒரு தன்மைத்தாய் விளங்கும் அவனது முற்றறிவின் கண்ணே எல்லாக் கலையறிவுந் தானே விளங்கியபடியா யிருக்கு மென்பதே ‘கண்டது’ என்னும் அச்சொல்லாற் பெறப்பட்ட உண்மையாகும் என்க.

இனி,

இவ்வாறெல்லாம் உரைப்பின், இவ்வுலகங் களையும் இவ்வுயிர்களின் உடம்புகளையும் படைத்துக் காத்து அழிக்கும் வினை இறைவன்செயல் அல்லவெனப் பட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/173&oldid=1592906" இலிருந்து மீள்விக்கப்பட்டது