உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

  • மறைமலையம் - 31

பொருளையும் அசைத்து ஆட்டும் ஆற்றல் வாய்ந்த காற்று முதல்வனிலும் மிக்கதென்றுங் கொள்ளப் படும். அவ்வாறு கொள்ளப்படின், அறிவில்லாத காற்றுக் கடவுளாதல் யாங்ஙனமென மேல் எழுப்பிய தடைக ளெல்லாம் மீண்டும் எழும். ஆதலாற், கடவுள் காற்றினும் பார்க்க நுண்ணிய தன்மை வாய்ந்த அருவநிலையிலும் நிற்கவல்லவனென்பதே முடிக்கப்படும். அதுவேயுமன்றி, அங்ஙனம் அருவாயும் ருவாயும் நிற்கவல்ல முதல்வன் அவ்வாற்றால் அருவுருவமும் உடையனா மென்பதுந் தானே போதரும். இறைவன் இங்ஙனம் அருவாயும் உருவாயும் அருவுருவாயும் நிற்கவல்லனென்னும் உண்மையை நந்தமிழ்ச் சான்றோர்கள் கண்டறிந்தமைக்குச் சிவஞான சித்தியாரிற் போந்த,

“அருவமோ உருவா ரூவ மானதோ அன்றி நின்ற

உருவமோ உரைக்குங் கர்த்தா

வடிவெனக் குணர்த்திங் கென்னில்,

அருவமும் உருவா ரூவ

மானதும் அன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன

ஒருவனுக் குள்ள தாமே"

என்னுந் திருப்பாட்டே சான்றாம். எனவே, நங் கண் முதலிய பொறிகளுக்குப் புலனாகும் நிலன் நீர் நெருப்பு காற்று என்னும் நாற்பெரும் பொருள்களில், இறைவன் தன்னைப் போல் அருவாயும் உருவாயும் அருவுருவாயும் ஒளி கிளர்ந்து நிற்குந் தீப்பிழம்பின்கண்ணே தான் புலனாய்த் தோன்றி நின்று எல்லா வுயிர்க்கும் அருள் வழங்குகின்றா னென்பதும் முடிக்கப்படும். யாங்ஙனமெனிற், காட்டுதும்.

தீயானது, காற்று நீர் நிலம் என்னும் ஏனையெல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிறைந்து நிற்கும் அருவ நிலையும், அப்பொருள்களிற் சிலவற்றின்கண்ணே தான் விளங்கித் தோன்றுதற்கேற்ற காரணம் உண்டாய வழித்தான் அனற் கொழுந்து வடிவாய்ச் சுடர்ந்து திகழும் உருவ நிலையுங், கையாற் பற்றப்படாத அருவ நிலையுடன் கண்ணாற் பற்றப்படும் உருவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/185&oldid=1592918" இலிருந்து மீள்விக்கப்பட்டது