உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

205

ஓசை ஏனை எல்லா ஓசைகட்கும் முன்னதாய் இயற்கையே தோன்றி இயங்கும் பழமையுடைத் தாதல் பற்றியே அதற்குப் பிரணவம் எனப் பெயர் தந்தாரென்பது அறியப்படுகின்றது.

இனி, ஓ என்னும் இம்முதலோசை தானுங் காதினாற் கேட்கப் படுவதேயன்றிக் கண்ணினாற் காணப்படுவதன்று. மற்றுக், கடவுள் வணக்கமோ கண்ணினாற் காணப்படும் ஒரு பொருளினை நிறுத்தி அதனெதிரே செய்யப் படுவதன்றிக் காதினாற் கேட்கப்படும் ஓர் ஓசைக்குச் செய்யப்படுவதன்று. மக்களெல்லாருந் தம்பால் அன்பு பாராட்டி வணங்கப்படும். பொருளைத் தங்கண்ணெதிரே காணப் பெருவிழைவு கொள்கின்றரனன்றிக் காதாற் கேட்குமளவில் தமது அவா அடங்கப்பெறுபவர்களாய் இல்லை. ஆகவே, மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், அவர் ஒருவரோடொருவர் அளவ ளாவி ஒருங்கிருந்து வாழ்தற்கும் இன்றியமையாக் கருவி யான எல்லா எழுத்தோசைகட்கும் முதலான ஓங்காரமும் இறைவனுக்கு ஓர் ஒப்பற்ற வடிவமாதலை நந்தமிழாசிரியர் ஆராய்ந்தறிந்தபின், கட்புலனாகாத அவ்வோங்கார வடிவத்தைக் கட்புலனாம்படி வைத்து வணங்குவது எங்ஙனமென்றாராயத் துவங்கினாராதல் வேண்டும். ஓசையை கவர்தற்குக் கருவியா யிருப்பது யாது? காதே யன்றோ? காதே ஓசையைக் கவருங் கருவியா யிருத்தலை அறிந்தபின், அக்காதின் வடிவத்தை, எல்லா ஓசைகட்கும் முதலான ஓகாரத்திற்கும் வடிவாக எழுதத் தெரிவது இயற்கை யன்றோ? வரிவடிவில் எழுதப் படும் 'ஓ' என்னும் எழுத்தின் ருவத்தையும், மக்களாகிய நஞ் செவியின் உருவத்தையும் ஒத்திட்டுப் பார்மின்கள்! ஓவின் உருவுஞ் செவியின் உருவும் ஒன்றா யிருத்தலை எளிதில் உணர்வீர்கள். நம் பழந்தமிழ்ச் சான்றோர்கள் ஓசையை யுணருஞ் செவியின் உருவமைப்பை உற்றுநோக்கியே முதலோசையாகிய ஓங்காரத்திற்குக் கட்புலனாம் உருவினை அமைத்த நுட்பம் இப்போது யாவரும் எளிதில் அறியற் பாலார்.

இனி, ஓங்கார ஒலிக்குக் கட்புலனாம் உருவமைப் பினைத் தெரிந்து கொண்டபின், சில காலமெல்லாம் அதனை வரிவடிவில் மணலிலும் பனையேட்டிலும் எழுதி, அதன் ஓசையை வாயினாலும் ஓம் ஓம் எனப் பலகாற் சொல்லித், தங் கட்புலனையும் மனனையும் அவ்வுருவிலே நிலைபெற நிறுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/230&oldid=1592964" இலிருந்து மீள்விக்கப்பட்டது