உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

28. திருமணச் சடங்கு

இனி, இத் தென்றமிழ் நாட்டில் இப்போது நடத்தப் பட்டுவருந் திருமணச் சடங்கு, ஆரியவழிப்பட்ட பார்ப்பனர் களால் ஆரியமொழியில் நடத்தப்படினும், முதன் முதல் இத் திருமணச் சடங்கை உண்டாக்கி அதனை நடத்திக் காட்டினவர் பண்டைத் தமிழாசிரியர்களே யல்லால், ஆரியக் குருமார் அல்லரென்பது, இருக்குவேதம் முதலான பழைய ஆரிய நூல்களை நடுநின்று ஆராய்ந்து நோக்கு வார்க்கும், வடநாட்டில் இன்றைக்கும் நடைபெற்றுவருந் திருமண நிகழ்ச்சிகளை நேரே சென்று காண்பார்க்குந் தெற்றென விளங்காநிற்கும். திருமணச்சடங்குகளை முதன் முதல் வகுத்து அவற்றின்படி திருமணம் நடத்தினவர்கள் ஆரியர்களேயாயின், ஆரியர் கொணர்ந்த பாட்டுகளே பெரும்பான்மையாய்க் காணப்படும் இருக்குவேத முதல் ஒன்பது மண்டிலங்களிலே திருமணச் சடங்கைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதாயினுங் காணப்படுதல் வேண்டும். மற்று, அவற்றில் அது முழுதுமே காணப்படாமையின் அதனை ஆரியர் அறியாரென்பதை அறிஞர் கருத்திற் பதித்தல் வேண்டும். இனித், திருமணச் சடங்கை நுவலும் ஒரேயொரு பதிகங் (85) காணப்படு வதெல்லாம் இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின்கண் மட்டுமே யாகும். இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்துள்ள பதிகங்களோ, ஆரியர் இவ்விந்திய நாட்டிற்புகுந்து குடியேறி, இவ்விந்திய நாட்டின் பழைய நாகரிக மக்களான தமிழருடன் கூடி உறவாடி அவருடைய பழக்க வழக்கங்களைக் கற்று, அவற்றைத் தாமுந் தழுவி நடக்கத் தொடங்கியபின், தமிழாசிரியராலுந் தம் ஆரியக் குருமாராலும் ஆக்கப் பட்ட வைகளே யாகும். ஆகவே, திருமணச் சடங்கை முதன்முதல் வகுத்தவர் செந்தமிழ்ச் சான்றோரே யென்பதும், அச்சடங்கையே ஆரியமொழியில் முதன்முதற் பாட்டாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/246&oldid=1592980" இலிருந்து மீள்விக்கப்பட்டது