உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

245

ஒருவனுக்குக் கள்ளருந்தலாகாதெனக் கழறி யுரைக்கும் உரையோடொப்ப வைத்து நகையாடி விடுக்கற் பாலதாமன்றி மற்றென்னை? இங்ஙனமெல்லாங் கதை கட்டித் தமிழர்களையும், அவருள் அறிவிற்சிறந்த சான் றோரையுங்கூட ஏமாற்றிவிட்ட பார்ப்பனர்தஞ் சூழ்ச்சித் திறனை என்னென்பேம்! சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் அறிவிற் சிறந்த சான்றோரா யிருந்தும், அவர் தாமும் பார்ப்பனரின் சூழ்ச்சியில் ஏமாந்து, கற்பிற் சிறந்த கண்ணகிக்கு அருந்ததியை உவமையாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்! இனி, ஆராய்ச்சியறிவுமிக்க இக் காலத்திற் பார்ப்பனர்தஞ் சூழ்ச்சியிற் சிறிதும் ஏமாறாது, அவர்தங் கட்டுகளையெல்லாந் தகர்த்தெறிந்து, தமது பண்டை சிறப்பினையுந், தமிழ்மாதர் தங் காதற் கற்பொழுக் கத்தினையும் பண்டு போல ஒளிரச் செய்தல் தமிழர்க்குந் தமிழ்ச் சான்றோர்க்கும் இன்றியமையா மான வாழ்க்கையா மென்க.

ச்

இனி, அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் என்னும் ஆரியப்பார்ப்பனச் சடங்கையும், பார்ப்பன ஆசிரியனையும் ஒழித்தபின், தமிழாசிரியர் ஒருவரையே திருமணம் நடத்து தற்கு அமர்த்தி, அவர் கீழ்க்காட்டியவாறு முத்தீ வேள்வி வேட்டுத் திருமணச் சடங்கை நடத்தும்படி செய்க:

முதலில், மணமக்களிருவர்க்குந் தீயோராலுந் தீய ஆவிகளாலும் ஏதுந் தீங்கு நேராமைப் பொருட்டுத் திரு ஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்த,

“பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும், வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே”

என்னுந் திருப்பாட்டை ஓதித், தருப்பைப் புல்லைத் திரித்து இருவர்தங் கைகளிலுங் காப்பாகக் கட்டுக. இதற்கு முன் செய்ய வேண்டிய காலைக்கடன் மாலைக்கடன் கடவுள் வழிபாடு முதலியவைகளைத் தமிழ்மந்திரம் ஓதிச் செய்யும் முறைகள் எமது மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி என்னும் நூலில் விரிவாக எடுத்துக் காட்டப் பட்டிருக் கின்றன. அவையிற்றை அதிற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/270&oldid=1593004" இலிருந்து மீள்விக்கப்பட்டது