உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

31. பிணச்சடங்கு

இனி, இக்காலத்தே நடத்தப்படும் பிணச்சடங்கானது திராவிடஆரியப் பார்ப்பனர் உதவியல்லாமலே நடை பெற்று வருகின்றது. ஆனாற், பதினாறாம் நாள் நடத்தப் படுங் கல்லெடுப்புச் சடங்கிலும், ஆண்டுதோறும் வரும் இறந்தநாட் கொண்டாட்டத்திலும் பார்ப்பனர் பெரும் பாலும் வந்து கலந்துகொண்டு அவைதம்மை வட மொழியில் நடத்தி வைக்கின்றனர். ஆயினுஞ், சைவ வேளாள வகுப்பினரில் இச்சடங்குகளை நடத்திவைக்குஞ் சைவக் குருக்கண்மாரும் ருக்கின்றனர். ஏனைத் தமிழ் வகுப்பினரிலும் இவற்றைத் தமிழிலே நடத்தி வைக்குந் தமிழ்க்குருக்கண்மார் இருக்கின்றன ரெனவுஞ் சிலர் பலர் அறிவிக்க உணர்ந்தேம். எங்ஙனமாயினுந், தமிழ் வகுப்பினர் அனைவருந் தத்தம் வகுப்பிலுள்ள தமிழ்க் குருக்கண் மாரைக் கொண்டு தமிழிலேயே இச்சடங்குகளை நடத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றார்களென்பதனை ஈண்டு வற்புறுத்துகின்றேம்.

இனித், தமிழர்க்குள் இப்போது நடத்தப்படும் பிணச் சடங்குகள் இரண்டு வகையாய் நடத்தப்படுகின்றன. ஒன்று பிணவுடம்பைக் கழுவிக், கைகால்களைக் கட்டிக், கோவணம் உடுத்து, மேலே புதிய ஆடைபோர்த்துப் பாடையிற் கிடத்திப் பிணப்பறை முக்காற் கொட்டியவுடன், பாடையை நால்வர் தூக்கிக்கொண்டு ஏகக், கொள்ளி வைத்தற்குரியார் நெருப்புச் சட்டியுடன் போத, தாரை ஊதத் தம்பட்டங் கொட்டச் சுடுகாடு சென்று, விறகும் வறட்டியும் அடுக்கி,

அவ்வடுக்கின்மேற் பிணத்தை வளர்த்திச் சுட்டுவிட்டுத் தலைமுழுகிச் செல்கின்றனர். இதுவே பெரும்பாலும் எல்லா வகுப்பினருள்ளுந் தொன்று தொட்டு நடைபெற்று வரும் பிணச்சடங்காகும். இது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/280&oldid=1593014" இலிருந்து மீள்விக்கப்பட்டது