உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் - 31

நிகழ்ச்சி இனிது புலனாகா நிற்கின்றது. இதன் உண்மைக்கு வழக்கத்தில் நாங் காணும் உடைமாற்றை இங்கெடுத்துக் காட்டுவாம். ஒரு சிறுவன் பள்ளிக்கூடஞ் சென்று கல்விபயிலத் துவங்குங்கால், அவனது அந் நிலைக்குத் தகக் கீழே ஒரு சிறு துணியுடுத்து மேலே ஒரு சிறு சட்டையிட்டுச் செல்கின்றான்; அந்நிலையிலும் அவன் ஓர் ஏழையாயிருந்தால் விலைகுறைந்த உடுப்புகளை உடுத்துச் செல்லுதலும், அல்லதவன் ஒரு செல்வனாயிருந்தால் விலையுயர்ந்த உடுப்புகளை மேற்கொண்டு செல்லுதலுங் நாங் காண்கின்றோம். பிறகு, அவன் மேன்மேற் கல்வி யுணர்விற் சிறந்து மேன்மேல் வகுப்புகளுக்கு மாற்றப்படுங் கால், அவ்வந் நிலைகளுக்கு ஏற்பப் பழைய உடைகளைக் களைந்தெறிந்து, தனதுடம்பின் வளர்ச்சிக்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஏற்ற உடைகளையே அணிந்து கொள் கின்றான். கல்வி பயின்று கல்லுரியை விட்டு அரசன் கீழ் ஓர் அலுவலில் அமருங்கால் அதற்கேற்ற உடைகளை அணிந்து செல்கின்றான். அலுவல்களிலும் அறிவினாற்ற லுக்குஞ் செய்கைத்திறத்திற்கும் ஏற்ப ஊர் காவற்றலைவ னாயும், அமைச்சனாயும், படைத் தலைவனாயும் மேன் மேலுயர்ந்த நிலைகளைப் பெறுங்கால் அவ்வந்நிலை களுக் கேற்ற உடைகளை அவன் மேற்கொண்டு திகழ்தலையுங் நாங் காண்கின்றேம் அல்லோமோ? இங்ஙனமே உயிர்கள் தமதறிவுந் தமதின்பவுணர்வும் மேன்மேற் கிளர்ந்தொளிரும் நிலைகளுக்கேற்ப வெவ்வேறுடம்புகளைப் பெற்று வெவ்வேறு பிறவிகளை எடுக்குமென் றுணர்ந்து கொள்க.

ஓருடம்பில் நின்ற ஓர் உயிர் அவ்வுடம்பைக் கருவி யாய்க் கொண்டு எத்துணை அறிவும் உணர்வும் பெறுதல் கூடுமோ அத்துணைக்கே அவ்வுடம்பில் நிற்கும். அந் நிலையின் மேற்பட்ட அறிவும் உணர்வும் விளங்குதற் கேற்ற தகுதியும் நேரமும் வருங்கால், அதற்குத்தகத் தான் நின்ற பழவுடம்பு இடந் தராமையின் அவ்வுயிர் அதனைவிட்டு ஏகும்; இங்ஙனம் ஓருயிர் தான் மேற்கொண்டுவந்த ஓருடம்பை விட்டு ஏகுதலையே இறத்தல்' என்று வழங்கி வருகின்றார்கள். இறத்தல் என்னுஞ் சொல்லுக்குக் கடத்தல் என்பதே பொருள். அங்ஙனம் எடுத்த ஓருடம்பை விட்டுப் பிறிதோருடம்பை அடுத்தலையே பிறத்தல் என்றுஞ் சொல்லுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/289&oldid=1593023" இலிருந்து மீள்விக்கப்பட்டது