உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

63

ங்ஙனமாக அசோக வேந்தன் காலத்தில் விந்திய மலைக்குத் தெற்கே வந்த திராவிட ஆரியப் பார்ப்பனரே, நெடுக மராட்டிய தேயத்திலும் ஆந்திர கன்னட மலையாள தேயங்களிலும் இத்தென்றமிழ் நாட்டிலுங் குடியேறி, ஆங்காங் குள்ள திராவிடரிற் கீழ் வகுப்பாருடன் கலந்து, பல்வேறு வகைப் பிரிவினையுடைய பார்ப்பனர் ஆயினர். வடக்கிருந்து வந்த பார்ப்பனர் பல்வகைப் பறவைகள் மீன்கள் விலங்குகளின் இறைச்சியுடன், மாட்டின் இறைச்சியுந் தின்றுவந்தன ரென்பது இருக்கு முதலான வேதங்களாலும், அவற்றின் பிரமாணங் களாலும், மநு முதலான மிருதி நூல்களாலுந் தெற்றென விளங்குதலானும், இன்றைக்கும் வங்காளத்திலுள்ள பார்ப்பனர் ஊனுணவு, கொள்வதை எவரும் நேரே சென்று காணலாமாக லானும், இத் தமிழ்நாட்டிற் குடியேறித் தமிழிற் சிறந்த புலவராய் வயங்கிய பார்ப்பனருங்கூட ஊனுணவை விலக்காமல் அதனை உட்கொண்டு வந்தமை கபிலர் பாடிய “கடுங்கண்ண கொல் களிற்றால்” என்னும் புறநானூற்றுச் செய்யுளால் நன்கறியக் கிடத்தலானும், இத் தமிழ்நாடு புகுந்த பார்ப்பனர், பண்டு தொட்டே ஊன்மறுத்த சைவ அருளொழுக்கத் தினரான உயர்குடி வேளாளருடன் கலக்க இடம் பெறாமல், தம்போல் ஊன் உணவு கொள்வாரான ஏனை இழிகுடித் தமிழருடன் மட்டுமே கலக்க இடம் பெற்றுத், தாந் தாங் கலந்த தமிழ்க்குடி மக்களின் ஏற்றத் தாழ்வுக்குத் தக்கவாறு தாமுந் தம்முள ஏற்றத்தாழ்வு பல உடைய பல்வகைப் பார்ப்பனர் ஆயினர். இன்றைக்கும் மலையாளத்தில் நம்பூரிப் பார்ப்பனரும் பிறரும் மலையாள மகளிரைக் கூடி வாழ்தல் எவரும் அறிந்ததோர் உண்மை யன்றோ?

இன்னும், வடக்கிருந்து வந்த பார்ப்பனரைப்பார்த்து, அவர்போல் ஆரிய மொழியைக் கற்று, அதனையே கடவுள் வழிபாட்டிற்கும் மணச்சடங்கு பிணச்சடங்குகட்கும் பயன் படுத்தி, அவர்போல் தாமும் பூணூல் பூண்டுங், கீழாடை மேலாடை யுடுத்தும், உச்சிக்குடுமி வைத்தும் பார்ப்பனராய் விட்ட தமிழ்மக்களும் பலர்; இன்னும் பார்ப்பனராகி வருந் தமிழரும் மிகப் பலர். இராமாநுசர் காலத்திலிருந்து வைணவப் பார்ப்பனராகி வருந் தமிழருக்குங் கணக்குண்டோ? ‘அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையுஞ் சொத்தை’யாதல் போற்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/88&oldid=1592812" இலிருந்து மீள்விக்கப்பட்டது