உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

11. தமிழர் கொள்கை

அங்ஙனமாயினும், பகுத்தறிவும் நாகரிக முதன்மையும் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னமே தொட்டு வாய்ந்தவராகிய நம் பண்டைத் தமிழாசிரியரும் அவர் வழிப்பட்ட நந் தமிழ் மேன்மக்களும் இம்மை மறுமை வாழ்க்கைக்குரிய கொள்கைகள் சிலவேனும் உடையராதல் வேண்டுமன்றோ வெனின்; வேண்டும். அவை தம்மைச் சிறிது ஆராய்ந்து உரைப்பாம்.

வ்வுடம்போடு இசைந்து சிறிது காலம் நாம் இந்நிலவுலகத்தின்மேல் இருந்து உயிர்வாழும் வாழ்க்கையே இம்மை வாழ்க்கையாகும். இனி, இவ்வுடம்பையும் இந் நிலத்தையும் விட்டுப்போய், இப்போது நம் பொறிபுலன் களுக்கு நேரே விளங்காத வேறு நுண்ணிய உலகங்களில் அவ்வுலகங்களுக்கு ஏற்ற நுண்ணிய வுடம்புகளில் இருந்து சிலகாலம் வாழும் வாழ்க்கையும், அவ்வாழ்க்கையும் அங்கு முடிந்தபின் மீண்டும் பருவுடம்பிற் புகுந்து அப்பருவுடம்பிற் கேற்ற பருப்பொருள் உலகங்களிற் பிறந்து உயிர்வாழும் வாழ்க்கையுஞ் சேர்ந்து மறுமை வாழ்க்கை என்று கருதப் படும். இவ்வுடம்பொடு கூடி நாம் இம் மண்ணுலகிற் பிறவி யெடுப்ப தற்கு முன்னமே, இந்நிலமும் இந்நிலத்து நுகர் பொருள்களும் அமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலம் இல்லையானால் நாம் பிறவியெடுதது உலவுதல் முடியாது. இந்நிலம் இருந்தாலும், இதன்கண் மரஞ் செடி கொடிகளும் இவற்றின் பயன்களான இலையும் பூவுங் காயுங் கனியுங் கிழங்கும் வித்தும், இவற்றின் வேறான நீரும் நெருப்புங் காற்றும் இல்லையானால் நாம் ஒரு நொடிப் பொழுதுதானும் இங்கிருந்து உயிர்வாழ்தல் இயலாது. ஆகையால், இவை யெல்லாம், யாம் பிறந்து எம்மறிவால் அறியப்படுதற்கும் எம்பொறி புலன்களால் நுகரப்படுதற்கும் முன்னமே அமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/95&oldid=1592820" இலிருந்து மீள்விக்கப்பட்டது