உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் - 31

சோற்றையும் தண்ணீரையுந் தேடுகின்றார்; தமக்கு ஒரு நோய் வந்துவிட்டால் உடனே அது தீர்க்கும் ஓர் அருமருந்தினை ஆராய்ந்தலைகின்றார்; ஆகவே, அவர் சொல்லிய சொல்லுக்குப் பின் அவர் செய்யுஞ் செயல் முழு மாறா யிருத்தலின், அவர் சொல்லிய சொற்றான பொய், உலகமும், உடம்பும் மெய் யென்பதனையே அவரது செயல் காட்டுகின்றதன்றோ? அற்றேல், உடம்பும் நிலையின்றி அழிந்து போகின்றதே யெனின்; நிலையின்றி அழிவது வேறு, பொய்யாவது வேறென்று பகுத்தறிதல் வேண்டும்; நிலையின்றி யழிவதெல்லாம் நம்பொறி புலன்களுக்கு விளங்காத நுண்ணிய நிலையினை அடை றனவே யன்றி, அவை பொய்யாகவில்லை யென்பது இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூல் ஆசிரியரால் ஆராய்ந்து நிறுவப்பட்டிருக்கின்றது. இவ்வாறு தெளிந்த மெய்ப்பொருள் களாய் இருக்கும் உலகத்தோடும் உடம்போடுஞ் சேர்ந்துலவி, அம் முகத்தாற் சிறிது சிறிதாக அறிவு விளங்கப் பெற்று வருஞ் சிற்றுயிர்களாகிய நாம் இவ்வரும் பெருஞ் சேர்க்கையை நம்மறிவாலும் நஞ் செயலாலும் பெற இயலாமல், நம்மினுஞ் சிறந்த பேரறிவும் பேராற்றலும் பேரிரக்கமும் வாய்ந்த வேறு ஒர் அரிய விழுமிய உயிரின் செயலாற் பெற்றிருத்தலி னாலேயே, இவ்வுடம்பின் சேர்க்கையையும் இவ்வுலகின் சேர்க்கையையும் இவ்வுலகத்துப் பொருள்களின் சேர்க்கை யையும் விட்டு நீங்கும்படி நேருங்கால், அந்நீக்கத்தைத் தாங்க இயலாமல் மக்களாகிய நாம் எவ்வளவோ நெஞ்சம் நொந்து கதறி அழுகின்றோம்!

நாமே நம்மறிவாலும் நஞ்செயலாலும் இவ்வுலகு உடற் சேர்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள வல்லவர்களா யிருந்தால், இவைகளைப் பிரிந்து சாக வேண்டுவதில்லை யன்றோ? மேலும், நமக்கு அறிவையும் இன்பத்தையும் மேன்மேற் பெருகச் செய்யும் இவ்வுலகுடற் சேர்க்கை நமக்கு இனியதாகவே இருக்கக் காண்கின்றோமல்லது, இன்னாததா யிருக்கக் காண்கிலோம். இதனை இன்னாத தாகவே எல்லாருங் காண்பராயின், எவருமே இம்மண்ணுலகில் உயிரோடு இரார். உலகையும் உயிரையும் எட்டிக் காயாகக் கருதிக் கசந்து பேசியவர்களுங்கூட அவற்றை உடனே துறந்து இவ்வுலகத்தைக் கடந்து சென்றார் அல்லர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/97&oldid=1592822" இலிருந்து மீள்விக்கப்பட்டது