உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

75

“நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலுமாகும்" என்று அஃது இரு பொருளும் உடைத்தாக ஓதப்பட்டவாறென்னை யெனின்; அது காப்பியத்தொடு முரணுவதாகலிற் கொள்ளற்பாலதன்றென மறுக்க. என்றது குதிரை யானை என்றற் றொடக்கத்தனவும் உறங்குதலின், அவற்றின் கழுத்திற் கட்டிய மணியினோசையும் அடங்கினமை கூறிற்று; இனிப் பாடிவீட்டின்கண் எல்லாருந் தொழிலவிதற்குத் தெரிகுறியாக அடித்துவிட்ட மணியென்றுரைப்பினும் அமையும். “பூத்த ஆடு அதிரற்கொடி” எனச் சொற்களை மாறிக் கூட்டுக. படார் சிறுதூறு. சிதர் - திவலை. துகில்முடித்துப் போர்த்த - கூறையால் மயிரை முடித்து உடம்பையும் போர்த்துக் கொண்ட; இச் சொற்றொடர் மெய்காப்பாளர்க்கு அடையாய் நின்றது; "மீப்பால் வெண்டுகில் போர்க்குநர் பூப்பால், வெண்டுகில் சூழ்ப்பக் குழன் முறுக்குநர்” என்னும் பரிபாடற் பத்தாஞ் செய்யுளடிகள் ஈண்டு ஒப்பிடற்பாலன.ஓங்குநடைப் பெருமூதாளர் உயர்ந்த நல்லொழுக்கத்தினையுடைய மெய்க்காப்பாளர்; தம் அரசர்க்குப் பகையாவார் செய்யுங் கீழறுத்தல்களுக்கு இடங் கொடாது தம் அரசர் மாட்டு மெய்யொழுக்க முடையராதல் பற்றி ‘ஓங்குநடை' யுடையரெனச் சிறந்தெடுத்துக் கூறினார்; 'பெருமூதாளர்' என்பது பெரிது முதிர்ந்த காவலாளர் எனப் பொருடருதலின், ஏனைக் காவற்றொழிலிலெல்லாங் கடமை வழாது மெய்ப்பட ஒழுகி முதிர்ந்தார் தம்மையே பின்னர் மெய்க்காப்பாளராக வைப்பரென்பதூஉம் பெற்றாம்.

(55-58) பொழுதினை இத்துணையென்று வரம்பறுத்து உணரும் பொழுதறி மாக்கள், அரசனைத் தொழுது கொண்டே காணுங் கையினராய், விளங்க வாழ்த்தி ‘நிலவுலகத்தை வென்று கைப்பற்றுதற்குச் செல்வோனே! நினது கடாரத்திலே இட்ட சிறிய நீருள்ள நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இவ்வளவு' என்று சொல்ல வென்க.

தம் அரசர்க்குப் பகைவரானோர் செய்யுங் கீழறுத்தலுக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக் கூறுவார் போலாது, என்றுந் தம் அரசர்பால் நெகிழா மெய்யன்பு பூண்டு பொழுதினைப் பொய்த்தலின்றி அறிவிப்பார் இவர் என்பது புலப்படப் 'பொய்யா மாக்கள்' என்றும், பொழுதளந்தறியுந் தொழிலன்றிப் பிறிது அறியாமையின் இவரை மக்கள் என்னாது மாக்கள் என்றுங் கூறினார். இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/108&oldid=1578961" இலிருந்து மீள்விக்கப்பட்டது