உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

1. பாட்டினியல்பு

வேந்தர் பெருமானான சோழன் கரிகாற் பெருவளத்தான் செங்கோலோச்சிய தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறுமுகத்தால், குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்னும் அகனைந்திணை யொழுக்கத்தில் இடைநின்ற பாலை யொழுக்கத்தை உணர்த்துதற்குப் புகுந்த நல்லிசைப் புலவரான உருத்திரங் கண்ணனார் இப்பாட்டிற்குப் பட்டினப் பாலை யெனப் பெயர் குறித்தருளினார்.

இனி, இதனாசிரியர் புறத்தே கட்புலனுக்கு உருவாய்த் தோன்றும் பட்டினத்தையும், அகத்தே உயிரினுணர்வுக்குப் புலனாய் அருவாய்த் தோன்றும் பாலை யொழுக்கத்தினையும் பாடுதற்குப் புகுந்த நுணுக்கத்தை உணருங்கால் இப் பாட்டின் உயர்ச்சி தெற்றென விளங்கா நிற்கும். அருவாய் அறிவாய் இன்பமாய்யாண்டும் பரந்து நிற்கும் முழுமுதற்பெரும்பொருளைக் கறை கெழுமிய அறிவும் முறைதழுவாச் செயலுமுடைய உயிர்கள் அறிந்தடைதற்கு இருதிறப்பட்ட நிலைகளிருக்கின்றன. அவை அறிவுநிலை, உணர்வுநிலை என்பனவாம். இவற்றுள், அறிவுநிலை என்பது காணப்பட்ட வுருவான இவ்வுலகியற் பொருள்களின் வியத்தகு அமைதிகளைக் கண்டு, இவை, தம்மை இங்ஙனம் அமைத்தவனான, பேரறிவும் பேராற்றலுமுடைய முதற்பொருள் ஒன்றுண்டென்று அதன் இருப்பு மாத்திரம் அறிவிப்பதாம்.மற்று அம் முதற்பொருளின் உண்மைத் தன்மையோ அவ் வறிவுக்கு ஒரு சிறிதாயினும் புலப்படமாட்டாதாம்.

உயிர்களின் அறிவு, உலகியற் பொருள்களை ஒன்றுமைப் பட்டு நின்று அறிதற்குக் கருவிகளான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக்கருவிகளைந்தானும், மனஞ் சித்தம் புத்தி யகங்காரம் என்னும் அகக்கருவிகள் நான்கானும் நடைபெறுவ தொன்றாம். அகம் புறம் என்னும் இக் கருவிகளின் றுணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/162&oldid=1579170" இலிருந்து மீள்விக்கப்பட்டது