உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

  • மறைமலையம் - 9

கலந்துநின் றின்புறுதற்குரிய உணர்வுநிலையு மென்னும் இருதிற நிலையினையும் உயிர்களுக்கு முறுகுவித்துப் பின் அவ்வறிவு நிலையினையுங் கழலச் செய்து தூய அன்புருவாய் விளங்கும் உணர்வுநிலையை நிலைபேறாக்குவித்து உயிர்களுக்கு

அளந்தறியப்படாத பெரும் பயனைத் தருதற்கு இன்றியமையாக் கருவியாவதுதான் பாட்டென்பது. அற்றேல், உரையுஞ் செய்யுளு மென்னும் இரண்டனுள் உரையும் அவ்விருதிற நிலையும் முறுகுவித்துப் பயன்றரு மாகலின் செய்யுள் மாத்திரமே அதனைப் பயக்குமென்றுரை கூறிய தென்னையெனின்; பால் கறந்த மாத்திரையே யுண்பார்க்குச் சுவை பயக்குமாயினும், அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழி பெருஞ்சுவை தருதல் போலவும், முற்றின கருப்பங் கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளைக்குமாயினும் மேலும் அதனைப் பாகுதிரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும், உரையும் நலம் பயப்பதொன்றேயாயினும் அதனைக் காட்டினுஞ் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம்.

கறந்த பால் நீராளமாய் நெகிழ்ந்திருத்தலின் அதன் கண்ணுள்ள சுவை மிகுந்து தோன்றாது குறைந்தே காணப்படு கின்றது அதுபோல உரையும் ஒரு வரம்பின் கட்படாது சொற் பெருக்கமுற்று நடைபெறுதலால் அதன்கட் புதைந்த பொருளும் ஆழமாகவின்றி அச்சொற்களோடு ஒத்து ஒழுகி மெல்லிதாய் விடுகின்றது. மற்றுக் காய்ச்சித் திரட்டிய பாற்கட்டியுஞ் சருக்கரைக்கட்டியும் இறுகித் திண்ணென்ற உருவுடையவா யிருத்தலின் அவற்றின்கட் சுவை மிக முதிர்ந்து தோன்றா நிற்கின்றது. அதுபோலச், செய்யுளும் எழுத்து அசை சீர் தளை அடி தொடைகளா 6 னமைந்த பாவாய் ஒரு வரம்புட் பட்டுச் சொற் சுருக்க முடைத்தாய் நடத்தலின் அதன்கட்புதைந்த பொருளும் அவற்றோடு ஒப்ப ஒழுகித் திட்பமும் ஆழமும் உடையதாகின்றது. பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக்கொண்டு போய் உயிர்களின் உணர்வுநிலையை எழுப்பி விடுவதாகும். உரையெல்லாம் அறிவுநிலையைப் பற்றியே நிகழுமல்லது அதன்மேற் சென்று உணர்வு நிலையைத் தொட மாட்டாதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/165&oldid=1579194" இலிருந்து மீள்விக்கப்பட்டது