உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் - 9

வெண்மீன்' என்னும் முதலடி தொடங்கி 'முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்' என்னும் இரு நூற்றுப் பதினெட்டாம் அடிகாறும் காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறுமுகத்தாற் பயில்வோர் அறிவை ஓர் ஒழுங்குறச் செய்து விளக்கிக் கொண்டுபோய்ப், பின் அவ்வறிவின் மேற்பட்ட அகவுணர்வை 'வாரிருங்கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே' என்னும் இருநூற்றுப் பத்தொன்ப திருநூற்றிருபதாம் அடிகளில் எழச்செய்து, அவ்வாறு இடையிற் கருக்கொண்டஅவ்வகப்பொருளை 'வேலினும் வெய்ய கானமவன், கோலினுந் தண்ணிய தடமென்றோளே' என்னும் இப்பாட்டின் இறுதி யடிகளோ டிணைத்து முடித்திட்டார். பாட்டியற்றும் நல்லிசைப்புலவர் நம்மறிவை ஒருமைப் படுத்து விளக்குமாறுபோற் பிறர் அங்ஙனஞ் செய்யமாட்டுவா ரல்லர். நம்மறிவெல்லாம் ஐம்பொறி வழிச்சென்று உலகியற் பொருள்களைப் பற்றிக் கொண்டே நிகழ்கின்றன. அப் பொருள்களை அங்ஙனம் பற்றிக் கொண்டு நிகழ்வுழியும் அப் பொருட்டன்மைகளை நுணுகி யறியமாட்டாவா யொழிகின்றன; இங்ஙனம் ஒரு நேரத் தொருபொருளைப் பற்றியும் பிறிதொரு நேரத்துப் பிறிதொரு பொருளைப் L பற்றியும் ஓரிடத்தும் நிலைபெறலின்றிக் குரங்குபோல் ஒடுதலாலன்றோ நம்மறிவு விளக்கமடைதலின்றி மழுங்கியே கிடக்கின்றது. அறிவு விளங்காது மழுங்கிக் கிடக்குமாயின் அதன் மேற்பட்ட உணர்வு எழப்பெறுதல் ஒருவாற்றானு மில்லையாம். ஆகவே, கறங்கோலைபோல் ஒருவழி நில்லாது சுழன்று திரிதரும் நம்மறிவை ஒர் ஒழுங்கு படுத்து ஒருமுகப்படுத்திக்கொண்டு சென்று உணர்வை எழச் செய்தலே நல்லிசைப் புலவோர்க்கு இன்றியமையாத கடமையாம்.

இனி, அறிவு அங்ஙனம் நிலையின்றித் திரிதலை மறித்து அடக்குமாறு யாங்ஙனமெனின்; எங்கே உண்மைத் தன்மை விளங்கித் தோன்றுமோ அங்கே நம்மறிவு ஊன்றி நிற்றல் கண்கூடா யறியப்பட்ட தொன்றாம். மானைப்போல் வெண்மைச் சலவைக்கல்லில் ஒர் உருச் செதுக்கலுறுவான் ஒரு கம்மியன் அம் மானின் உறுப்பமைதிகள் தோன்றுமாறு நுணுகியறிந்து அவற்றைச் சிறிதும் பிறழாமல் உண்மையாகச் சமைத்திடுவனாயின் அவ்வுருவைக் காண்பார் அறிவு அதன்கண் ஒருப்பட்டு நின்று வியத்தல் கண்டாமன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/171&oldid=1579244" இலிருந்து மீள்விக்கப்பட்டது