உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

(116 - 125 ) சுங்கங்கொள்வோர் நிலை

159

அவ் வியாமத்திலே, பெரிய காவிரியாறு பலவயினிருந்த பூக்களின் மணமெல்லாம் திரட்டிக்கொண்டு வந்து சேர்க்கும் தூய எக்கர் மணலில் அயர்ந்து உறங்கிய வண்ணமாய், வெள்ளிய பூங்கொத்தும் மடலும் உள்ள தாழையினையும் கரையினையு முடைய அகன்ற பண்டசாலைத் தெருவில் நல்ல அரசனது பொருளைப் பிறர் கவராமற் காக்கும் அடிப்பட்ட புகழினை யுடைய காவற் றொழிலாளர் காயுஞ் சினத்தையுடைய வெங்கதிர்ச் செல்வனான பகலவனது தேரிற் கட்டிய புரவி ஒரு நொடிப்பொழுதாயினும் மடிந்திராது இயங்குதல் போல சுங்கங்கொள்ளும்படியாக

நாடோறும் இளைப்புறாது ருப்பரென்க.

(126 - 141) பண்டசாலை முற்றம்

குறைவின்றி முகந்த நீரை முகில் மலையிலே பொழியவும், மலையிற் பொழிந்த நீர் கடலிற் சென்று பரவவும் மாரிக்காலத்தே பெய்தல்போலப் பிறநாடுகளிலிருந்து கடன்மேல் வந்தன கரையி லேறவும், தமிழ் நாடுகளிலிருந்து வந்து கரையிற் கிடப்பன பிற நாடுகளுக்குப் போகல்வேண்டி நீர்மேல் மரக்கலங்களிற் சேரவுமாக, அறிவான் அளந்தறிதற் கரியவாகவுள்ள பல பண்டங்களும் வரம்பறியப்படாவாறு வந்து தொக, அரிய காவலமைந்த பெரிய சுங்கச்சாவடியிலே காவற்காரன் சோழ மன்னர் அடையாள முத்திரையான புலியை இலச்சினையாக இட்டுப் பின் அவற்றை வெளியே போக்கினமையால், மதித்தறியப்பட்ட அப் பல பண்டங்களும் பொதிந்து வைக்கப்பட்ட மூட்டைப் போர்மேல் ஏறி முகில் உலாவப்பெறுங் குவட்டினையுடைய பெரிய மலைப் பக்கங்களிலே விளையாடும் வருடைமான்களின் றோற்றம் போலக் கூரிய நகங்களையுடைய ஆண் நாய்கள் ஆட்டுக் கிடாய்களோடு குதிக்கும் பண்டசாலை முற்றமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/192&oldid=1579404" இலிருந்து மீள்விக்கப்பட்டது