உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் - 9

இன்னும் இவர் உலகியற் பொருள்களைக் கிடந்தவாறே வைத்து உரைக்குமிடத்தும், குடகமலையிற் றோன்றிய காவிரியாறு சோழனாட்டின்கண் என்றும் நீர் அறாது நிரம்பிப் பொன் கொழித்து ஒழுகுதலும், கழனிகளெல்லாம் எப்போதும் விளைந்து கொண்டிருப்பக் கரும்பாலைகளிற் கரும்பை நறுக்கிப் பிழிந்து பாகு காய்ச்சுதலும், எருமைக் கன்றுகள் நெற்கூடுகளின் நிழலிலே ஆங்காங்கு உறங்கிக் கிடத்தலும், தென்னை வாழை கமுகு மா பனை மஞ்சள் இஞ்சி சேம்பு முதலியன மிகவுங் காழுமையாய் நெடுக வளர்ந்து அடர்ந்திருத்தலும், சிறு பெண்கள் வீட்டு முற்றத்தில் நெல்லுலர வைத்துக் காவலா யிருப்பச் சிறார் சிறுதேர் செலுத்தி விளையாடுதலும், கடற்கரை உப்பங்கழிகளிலே படகுகள் வரிசையாக நிற்றலும், கடற்கரையிற் கானற்சோலை வளஞ் சிறந்து தோன்றுதலும், மலர்வாவிகள் ஏரிகள் அடிசிற்சாலைகள் அரண்மனைகள் மாட்டுக் கொட்டில்கள் பௌத்தர் சைனர் மடங்கள் காளிகோயில்கள் முதலியன ஆங்காங்கிருத்தலும், செம்படவர் தம் குப்பங்களிலே இறாமீன் சுட்டுத் தின்றும் வயலாமையைப் புழுக்கி உண்டும் அடம்பு ஆம்பல் முதலியவற்றின் பூக்கள் சூடியும் ஒருவரோ டொருவர் செருக்குற்றுக் கவண்கல் வீச அவற்றிற்கு அஞ்சிப் பனைமரங் களிலுள்ள புட்கள் பறந்துபோதலும், அச் செம்படவரது புறச்சேரியில் பன்றிகளுங் கோழிகளும் உலாவ ஆட்டுக்கிடாய் களும் கௌதாரிப்பறவைகளும் விளையாட உறைக்கிணறுகள் பல இருத்தலும், சிறு குடிசை வீடுகளினுள்ளே தூண்டிற்கோலும் மீனிடும் புட்டிலுஞ் சார்த்திவைக்கப்பட்டிருத்தலும், அவ்வீட்டு முற்றங்களின் மணலிலே வலைகள் உலர்தலும், அங்குள்ள பரதவரும் பரத்தியரும் முழுநிலவு நாளிலே சுறாமீன் கொம்பை நட்டுக் கடற்றெய்வத்திற்குத் திருவிழாக் கொண்டாடுதலும், நகரத்துள்ள மாந்தர் மேன்மாடங்களிலேயாமத்திற் பலவகையான இன்பந்துய்த்து உறங்கினமையால்அவியாதுவிட்டவிளக்கங்களைக் கட்டுமரத்தில் மீன்பிடிக்கப்போய் வைகறையில் வந்த பரதவர் எண்ணிப் பார்த்தலும், கடை யாமத்தில் அப் பரதவர் கடற்கரை எக்கர் மணலிலே உறங்கிக் கிடத்தலும், சுங்கச்சாவடியிற் சுங்கங் கொள்ளுங் காவலர் அளவிறந்த பண்டங்களை யெல்லாம் தம் அறிவால் அளந்து பார்த்துச் சோழனுக்குரிய புலி முத்திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/213&oldid=1579452" இலிருந்து மீள்விக்கப்பட்டது