உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் - 9

கண்ணனாரது நல்லிசைப் புலமை செந்தமிழ்ப் புகழ்மைக்கு ஒரு நந்தா மணிவிளக்காமென்க.

இனி, இவ்வாசிரியர் உலக வியற்கைப்பொருட் டோற்றங் களை இடையறாது திரிந்து கண்டு வியந்து கழிபெருமகிழ்ச் சியெய்தி வந்தனரென்பது இப் பாட்டின் கட்டெற்றெனப் புலப்படுகின்றது. வானம்பாடிப் பறவை மழைத்துளியை உண்டு உயிர்வாழுமென்பதும், குயிற்பறவையுந் தூதுணம் புறாவும் தனித்துள்ள காளிகோட்டத்தில் ஒதுங்கியிருக்கு மென்பதும், செம்படவர் சேரியிற் கோழி கௌதாரி முதலிய புட்களிருக்கு மென்பதும், பாழ்பட்ட இடங்களிலே கூகை கோட்டான்கள் உறையுமென்பதும் இவரால் மிகவும் நன்றாகச் சொல்லப்பட்டிருக் கின்றன. இன்னும் எருமைக்கன்றுகள் மருதநிலத்திற் கிடத்தலும், களிற்றியானைகள் வெண்ணீற்றிற் புரளலும், மாடுகள் கொட்டில்களில் தொகுதி தொகுதியாக நிற்றலும், இறாமீன்கள் ஆமையிறைச்சிகள் செம்படவரால் தின்னப்படுதலும், பன்றியுங்குட்டிகளும் அவர் சேரியில் மிகுதியாயிருத்தலும், சுறாமீன் கொம்புகளை அவர் வழிபடுதலும், நண்டைப் பிடித்து ஆட்டுதலும், மலைப்பக்கங்களில் வருடை என்னும் ஒருவகை மான்கள் துள்ளிக் குதித்தலும், ஆட்டுக்கிடாய்கள் பண்டசாலை முற்றங்களிற் றிரிதலும், கட்டுத்தறியிற் பிணிக்கப்பட்டு நின்ற களிற்றியானைகள் அவற்றை யசைத்தலும், பரதவர்தங் குடிசை வீடுகளில் மீன்கறியும் ஆட்டிறைச்சியும் பொரித்தலும், குழியில் வீழ்ந்த யானை அக் குழியைத் தூர்த்தலும், பொய்கைகளில் முதலைகள் கிடந்துலாவுதலும், நீர்வற்றிய வாவிகளில் அறல் பட்ட கொம்புகளுடைய மான்கள் துள்ளுதலும் அங்ஙனமே சொல்லப்பட்டிருக்கின்றன; மற்றும் நெய்தல் அடம்பு ஆம்பல் தாழை வெண்கூதாளம் காந்தள் கரும்பு பூளை உழிஞை குவளை முதலிய பூக்களும், தெங்கு வாழை கமுகு மா பனை முதலிய மரங்களும், மஞ்சள் சேம்பு இஞ்சி புதவம் செருந்தி முதலிய செடிகளும் இவராற் புனைந்து கூறப்பட்டிருக்கின்றன. இவை தம்மால் இவ்வாசிரியர் உலகவியற்கையினை வழாது திரிந்துகண்டு வியக்குமியல் புடையா ரென்பது தெற்றெனப் புலப்படுகின்றதன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/215&oldid=1579457" இலிருந்து மீள்விக்கப்பட்டது