உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

183

இனி, இவர் இயற்றமிழ்வல்ல நல்லிசைப் புலவராதலொடு வான நூலினும்' வல்லவராகக் காணப்படுகின்றார். இவர், தாம் இயற்கைப் பொருள்களை மொழிந்து செல்லுங்கால் அவை தமக்கு வான்மீன் றோற்றங்களை உவமையாக எடுத்துக் காட்டுகின்றார்; மழை பெய்யாது வறத்தற்கு வெள்ளி என்னுங் கோள் தன்னிலை திரிந்து தென்றிசைப் பக்கமாய்ச் செல்லுதலே காரணமென்கின்றார்; திங்களைச் சூழ்ந்த மகமீனை நீர் நிரம்பிய வாவிக்கும் அதன் கரைக்கும் உவமையாகக் கூறுகின்றார்; வான்மீன்களும் கோள்களும் ஒன்றோடொன்று விரவுதலை ஒருவரோ டொருவர் பிணைந்து மற்போர் மற்போர் இயற்றும் செம்படவர்க்கு உவமையாக எடுக்கின்றார்.

அற்றேல், அக்காலத்து வான் நூலாராய்ச்சி உண்டோவெனின்; இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னிருந்து ஆரியபட்டராற் செய்யப்பட்ட வான் நூலிற் பிற்றைஞான்றை வான்நூலாராற் சொல்லப்படுகின்ற ‘இந் நிலமண்டிலம் தன்னைத்தானே சுற்றுதலும், ஞாயிற்றின் மேலும் திங்களின் மேலும் படும் நிழல்கள் நிலமண்டிலத்தின் சாயலாதலும்' முதலான அரிய பெரிய உண்மைகள் இனிது விளக்கப்பட்டிருத்தலானும், அவரை அடுத்துத் தோன்றிய வராக மிகிரரால் மேற்கோளாகக் கொள்ளப்பட்ட சூரிய சித்தாந்தம் என்னும் வான் நூல் மிகப்பழைய தொன்றாதல் அறிவுடையாரால் நன்கு துணியப்படுதலானும் பண்டைநாளில் வான் நூலாராய்ச்சி மிகுதியாயிருந்ததென்பது தேற்றமாமென்க. பண்டைக் காலத் திருந்த தமிழ்ப்புலவர் இலக்கண இலக்கியம் வல்லாராத லோடு ஏனை உண்மைநூற்புலமையும் உடன் வாய்ப்பப் பெற்றிருந்தார். ஒருசாரார் இசைத்தமிழும், பிறிதொருசாரார் நாடகத்தமிழும், மற்றொருசாரார் ஓவிய நூலும், வேறொரு சாரார் மருத்து நூலும், பின்னொருசாரார் வான்நூலும், மற்றை ஒருசாரார் சமயநூலுமாகப் பலப்பல பயின்று விளங்கினார்; அவரவர்க்குச் சிறப்புப் பெயர்களாய் அவரவரியற் பெயர்களோடு கூட்டி வழங்கப்படும் மருத்துவன் றாமோதரனார், மதுரைக் கணக்காயனார் என்றற்றொடக்கத்தனவே இதற்குச் சான்றா மென்க. இன்னும் இவை விரிக்கிற் பெருகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/216&oldid=1579460" இலிருந்து மீள்விக்கப்பட்டது