உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் - 9

அரிச்சந்திரன் கதையை விரிக்குங் காவியப்பொருளை நன்குணர்ந்து தேறுதல் எய்தல் தேற்றமேயன்றே? ஆ! பாட்டால் விளையாத நற்பயன் பிறிதொன்று உண்டுகொலோ! அற்றன்று; மேற்கூறிய காப்பியங்கள் தங்கண் நடைபெற்றுச் செல்லுங் கதைப்பாங் கினால் அங்ஙனம் உளம் நெகிழ்த்த வல்லனவாகுமன்றி, அவைதாமே அது செயமாட்டாதாலென ஒருசிலர் மறுப்பர்; அவர் அறியார், ஒருவன் சொல்லும் ஒருகதை கேட்பார்க்குச் சுவை பயவாது வெறுப்பை விளைவித்தலும், பிறனொருவன் சொல்லும் அக்கதையே மிகச் சுவைக்கும் நிரதாய்க் கேட்பாரை இன்புறுத்துதலும் உலகவழக்கினுங் காணக் கிடந்த தன்றே; அது போலக் காப்பியத்தின்கண் வருங் கதையினைச் சுவைக்கச்செய்யுந் திறம் செய்யுளியற்றும் புலவன் பாலதாய் நின்று அச்செய்யுட்கண் விளங்கித் தோன்றுமென்க. அல்லதூஉம், ஒருகதை தழுவி வாராது தனித்தனியே அகப்பொருட் டுறைகளைக் கூறும் பாட்டுக் களினும் உளம் நெகிழ்த்துந்தன்மை உண்டென்பது,

‘மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்

போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள் ஏதுற் றழிதியென் னீர்மன்னு மீர்ந்துறை வர்க்கிவளோ

தீதுற்ற தென்னுக்கென் னீர்இது வோநன்மை செப்புமினே’.

என்னுந் திருச்சிற்றம்பலக்கோவையார் திருவாக்கால் இனிது பெறப்படும்; தன் கணவனைப் பிரிந்தமையால் அவனைக் காணப்பெறாது, அவனை எப்போது காண்பேன் காண்பேன் என்று வேட்கை மிகவுற்றுத் தலைவி வருந்திக் கூறிய இச்செய்யுளை நோக்கும் ஏவர்தாம் மனம் நெகிழப் பெறாதார்? "மாதுபொருந்திய திருமேனியை யுடையவரும் இமயவரையை வில்லாக உடையவருமான சிவபெருமான் எழுந்தருளிய தில்லை நகரைச் சூழ்ந்து விளங்கும் மலர்கள் நிறைந்த அழகிய பொழில்காள்! அப்பொழிலைச் சூழ்ந்த கழிகாள்! அக்கழிகளிற் பயிலும் அழகு மிக்க பறவைக் கூட்டங்காள்! ‘நீ ஏது காரணம்பற்றி மனம் அழிகின்றாய்' என்றும் என்னைக் கேட்கின்றிலீர்கள்; 'நிலைபெறும் குளிர்ந்த கடற்றுறையினையுடைய தன் கணவன் பொருட்டு இவள் துன்பமுற்றது எதற்காக’ என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/281&oldid=1579543" இலிருந்து மீள்விக்கப்பட்டது