உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

253

தண்டமிழ்மாட்சி சிறந்த பாட்டினியல்பு தேறாராய், வெறுஞ் சொல்லாரவாரமும் எதுகைமோனை யமகம் திரிபு அந்தாதி சிலேடை முதலான புல் அலங்கார ஆரவாரமுமே பொருந்தப் பொருட்பேறிலவாம் பாட்டுக் களைக் கணக்கின்றிப் பாடிவீணே தமிழ்மொழி வளங்குறைத்துப் போதருகின்றார். அது கிடக்க.*

பொருட்பாகுபாடு

1

8: அன்னாய்

வருந்துதி

தோழி செவிலித்தாய் நிலை கூறி அறத்தொடு நிற்றற்குத் தொடங்குகின்றான்.

தாயே வாழக் கடவாய்! யான் கூறுவனவற்றை விரும்பிக் கேட்பாயாக. அன்னாய்! ஒளிபொருந்திய நெற்றியினையும் தழைத்த மெல்லிய மயிரினையுமுடைய என் தோழியின் உடம்பு நிறத்தினையும், உடம்பிற் செறியப் பொருத்தின அணிகலன் களையும் நெகிழச்செய்து மருந்துகளால் நீக்குதற்கரிதாகிய காடிய நோயானது வந்த காரணம் யாதென்று நீ ஊரில் குறிவைத்து அறிய வல்லாரிடம் கேட்டும், அந்நோய் தெய்வத்தான் வந்த தென்று அவர் கூறுதலில் பலவேறு வகையான உருவத்தையுடைய தெய்வங்களை வாழ்த்தியும் வணங்கியும் கலந்த பூக்களைத் தூவியும் தூபம் இட்டும் வாசனைப் பொடிகளை வீசியும் இங்ஙனம் எல்லாம் அவைதம்மை வழிபட்டும் அதனானும் அந்நோய் தீராமையின் துன்பமுற்று அந்நோயை அறியாத மயக்கத்தினை யுடையையாய் நீயும் வருந்துகின்றாய் என்க.

9 - 12: நற்கவின்

கடவலின்

தலைமகள் காதல் நோய்கண்டு தோழி தான் எய்திய நிலை கூறுகின்றாள். தலைமகளின் நல்ல அழகானது கெடவும் நல்மணங் கமழும் தோள்கள் மெலியவும், அதனாற் கையிலிட்ட வளை கழலுதலைப் பிறர் அறியா நிற்பவும், தான் தனிமையாயிருக்குந் துயர் மேன்மேல் வந்து வருத்தவும், அவள் தன் உள்ளத்தினளவே மறைத்து வைத்திருத்தலினால் தான் உயிர் வாழாமைக் கேதுவாகிய காதல் நினைவு இஃதென்று யான் சொல்லுதற்கு எளிதாகவன்றி வலிதாயிருத்தலினாலே யானும் அதனை வெளிவிடாது உள்ளடக்கி நடத்துவேனாயினேன் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/286&oldid=1579550" இலிருந்து மீள்விக்கப்பட்டது