உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் – 9

இவர்களிருக்குமிடத்தே பிளிறியோடி வந்தது. அது கண்டு அம்மகளிர் பெரிதும் நடுக்கமெய்தி வேறு செல்ல மாட்டாராய்த் தம்மிடத்தே வந்து வினாவிய அக்கட்டிளைஞனை அணு கி அஞ்சிநிற்ப, அவனும் தான் பிடித்த வில்லிலே கணையைப் பூட்டி எய்து அதனை விரைந்தோடிப் போகச்செய்தான். அதன்பின் அஞ்சிய அம்மளிர்க்கு ஆறுதல் கூறி அவரைத் தேற்றியபின் தலைமகளான அவ்வழகிய மங்கையின் சுடர்நுதலில் அச்சத்தாற்றோன்றிய வியர்வை துடைத்து, ‘யான் நின்னை மணம்புரிந்தின்பம் நுகர்வேன்' என்று கூறினான். அது கேட்டு நாணும் அச்சமுமுற்று அவள் அவனை விட்டு அப்பாற் போகவும் அவன் அவளை விடானய் மார்புறத்தழுவி, 'நின்னை மணம்புரிந்து பலர்க்கும், உபகரித்தலோடு கூடிய இல்லறத்தை நடாத்துவேன்; என் சொல்லை உண்மை என்று தெளிவாயாக' என மலைமேல் உறையும் முருகக்கடவுளைச் சுட்டிச் சூளுரைப்ப, அவளும் அதற்கு நெஞ்சு அமர இருவரும் அன்றைப்பகலெல்லாம் ஆண்டுள்ள சோலையிற் கழித்துப், பின் அவரிருவரையும் அவர் ஊரின் வாயிற் புறத்துள்ள நீராடுதுறையிலே நிறுத்திப் போயினான். பிறகு, ஒவ்வொரு நாளிரவும் ஆங்குவந்து தன்றலைவியைப் புல்லிப் போவன்; சில நாளில் காவலரானும், நிலவுவெளிப்படுத லானும் நாய்குரைத்தலானும், அவள் தாய் உறங்காதிருத்த லானும் அவளை முயங்குதல் வாயாதாயினும் அதுபற்றி மனஞ்சிறிதும் வருந்தாது போவன்; இங்ஙனம் இவன் பலரும் அஞ்சுதற் கேதுவான தன்னூரில் இராப்பொழுதின்கண் வந்து போதல் நினைந்தும், அவன் வரும் மலைவழி மிக்க இடருடைத்தாதலை நினைந்தும் என் தலைமகனுக்கு என்னாமோ என எண்ணி எண்ணி ஆற்றப்பெறாது வருந்தித் தலைமகள் மெலிவாளாயினள். அந்நிலையை அவள் நற்றாய் செவிலித்தாய் கண்டு ‘என்மகட்டு இவ்வேறுபாடு எற்றினா னாயிற்று?' என்று கட்டுவித்தியையும் வேலனையும் வேலனையும் வினாவ அவர் ‘இது தெய்வத்தான் வந்தது' என்று கூறினர். அது கேட்டுத் தெய்வத்தைப் பலவகையாற் பரசியும் அந்நோய் தீர்ந்திலதாகப் பின் தலைமகள் தோழி தன் றலைமகட்கு நேர்ந்த நோயின் வரலாற்றை முன்னடந்தபடியே வைத்து முழுதும் விடாமற் கூறினளாக இச்செய்யுள் ஆசிரியர் கபிலரால் இயற்றப் படுவதாயிற்று என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/293&oldid=1579564" இலிருந்து மீள்விக்கப்பட்டது