உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

275

நாணமும் அச்சமும் மேலிட அவன் நெருக்கத்தில் இருந்து விலக முயன்றாள். விலக விடாதவனாய்த் தன் மார்புற தழுவினான்” என்றாள்.

தலைவன் நிலையாகத் தோழி என்ன கூறினாள்?

குறிஞ்சி நிலத் தலைவனாம் அவன் பாறைகளில் மிளகுப் பழம் கிடக்கும். மாம்பழமும், பலாப்பழமும் கனிந்து வீழ்ந்து கிடக்கும். இவற்றின் தெளிவை உண்ட மயில்கள் மதுவுண்டார் போன்ற மயக்கத்தில் ஆடித் திளைக்கும்; விழாக்களின் போது கழையில் கட்டிய கயிற்றில் ஏறி ஆடும் மகளிர் போன்றதாகத் தோன்றும். இத்தகைய வளமார்ந்த மலைநிலத் தலைவன் தலைவியை மணந்துகொண்டு இல்லறம் நடாத்தப் பெரிதும் விரும்புகிறான்.

வருவார் அனைவரும் உண்ணுதற்குத்தக எப்பொழுதும் திறந்த வாயிலாய் இருக்கும் அகன்ற மனைக் கண் சுற்றமும் பிறரும் உண்டு எஞ்சிய உணவை நீ படைக்க யானுண்ணல் பெரும் பேறாம் என்று தலைவியிடம் கூறினான் தலைவன் என்றாள் தோழி.

தலைவன் செய்த சூழாகவும் பிறவாகவும் தோழி சொல்வ தென்ன?

மலைநிலக்கிழவனாம் முருகனை வணங்கி, இனிய அருவி நீரைப் பருகி உன்னைப் பிரியேன்; மணங்கொண்டு அறவாழ்வு நடத்துவேன் எனச் சூள் மொழிந்தான். களிற்றால் கூடிய கூட்டத்தை விட்டுப் பிரியானாய் அற்றைப் பகலெல்லாம் அங்கே தங்கினான். மாலை ஞாயிறு தன் கதிர் சுருக்கி மேற்கு மலையில் ஏறி மறைந்தது. மாலையை அறிந்த மான்கள் உறைவிடம் உற்றன. கன்றை நினைத்துக் காலிகள் சென்றன. அன்றில் பறவை தன் பெட்டையை அழைத்தது; பாம்பும் இரை தேடியது; ஆயர்கள் தம் ஆம்பலங் குழலை எடுத்து இசைத்தனர். அந்தணர் அந்திப்பொழுதுக் கடமைகளைச் செய்தனர். வளமனைகளில் மகளிர் குடும்ப வழிபாடாம் இல்லுறை தெய்வ வழிபாட்டைச் செய்யும் வகையில் விளக்கேற்றினர். காட்டில் வாழ்வார் பரணி லிருந்து தீக்கடை கோலால் நெருப்பை உண்டாக்கி ஒளி பெற்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/308&oldid=1579600" இலிருந்து மீள்விக்கப்பட்டது