உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

5. முல்லைப்பாட்டின்மேல்

நச்சினார்க்கினியருரை

இனி, இதுவே 'மாட்டு' என்னுஞ் செய்யுளுறுப்பின் பயனாமென்பது நுண்ணறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக்கிடப்பவும், இதன் கருத்துப் பொருள் இதுவாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள் ஒழுக்கம் அறிந்து உரை எழுதாராய், ஓர் அடியில் ஒரு சொல்லையுந் தொலைவிற் கிடக்கும் வேறோர் அடியில் வேறொரு சொல்லையுந் தமக்குத் தோன்றியவா றெல்லாம் எடுத்து இணைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார். நச்சினார்க்கினியர்க்கு முன்னேயிருந்த நக்கீரர், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகியார், அடியார்க்கு நல்லார் முதலான உரையாசிரியன்மாராதல், பின்னேயிருந்த சிவஞானயோகிகள் முதலியோராதல் இவ்வாறு செய்யுட் களைக் கண்டவாறெல்லாம் அலைத்து உரை எழுதக் கண்டிலம். மேலும்.நச்சினார்க்கினியர் இங்ஙனஞ் செய்யுட்களை அலைத்து நலிந்து பொருள் சொல்லு முறையை ஆசிரியர் சிவஞான யோகிகள் தாம் இயற்றிய தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் ஆங்காங்கு மறுத்தருளியவாறுங் காண்க. அகன்று கிடக்குஞ் செய்யுட் பொருளை அணுக வைத்துப் பொருத்திச் சொல்வதே தொல்காப்பியனார் கூறிய மாட்டு என்னும் உறுப்பாவதன்றிச் செய்யுள் ஒரு பக்கமும் உரை ஒரு பக்கமுமாக வைத்து உரைப்பது அஃது அன்றாம் என்பது கடைப்பிடிக்க. அற்றன்று; நச்சினார்க்கினியர் உரைக்கும் உரைப்பொருள் சிறந்ததாகலின், அவர் அவ்வாறு செய்யுட்களை அலைத்துப் பொருள் கூறுதல் குற்றமாகாதெனின்; நன்று சொன்னாய், அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/76&oldid=1578925" இலிருந்து மீள்விக்கப்பட்டது