உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

57

பட்டமையுங் கூறுகின்றார். வலியவில்லை நிலத்திற் சுற்றிலும் ஊன்றி, அம்புப்புட்டிலை அதில் தொங்க விட்டுப், பின் அவ்விற்களை யெல்லாங் கயிற்றால் தொடுத்துக்கட்டி வளைத்துச் செய்த இருக்கையில், நீண்ட குந்தங்கோல்களை ஊன்றி, அவற்றொடு படல்களை நிரைத்து வளைத்துச் செய்த வில்லரணங்களே சுற்றுக் காவலாக, அவற்றின்கண் உள்ள பலவேறு படைகளின் நடுவிலே, தலைவனுக்கென்று பலநிறமுடைய மதில் திரையை வளைத்துச் செய்த வீட்டின் அமைப்புக் கூறினார். அதன்பின் அங்ஙனம் வகுக்கப்பட்ட தலைமகனிருக்கையில் அழகிய மங்கைப் பருவத்திளைய பெண்கள் கச்சிலே கட்டப்பட்ட திண்ணிய வாளினை உடையராய் நெய்யைக் கக்குகின்ற திரிக் குழாயினாலே பாவையின் கையில் அமைந்த விளக்கின்சுடர் குறையுந்தோறுந் திரியைக் கொளுத்தி எரிக்கின்றார்கள்; குதிரை முதலியன உறங்குதலின் அவற்றின் கழுத்திலே கட்டப்பட்ட மணியின் ஓசையும் அடங்கிப்போன நடுயாமத்தில் மெய்க்காப்பாளர் தூக்க மயக்கத்தால் அசைந்து காவலாகச் சுற்றித் திரிகின்றார்கள்; இங்ஙனம் நடுயாமம் ஆதலும், பொழுது அளந்தறிவோர் தலைவன் எதிரே வந்துநின்று வணங்கி வாழ்த்திக் கடாரத்து நீரிலேயிட்ட நாழிகைவட்டிலாற் பொழுது இவ்வளவாயிற்றென்று அறிவிக் கின்றார்கள்; அதனைக் கேட்டவுடன் அரசன் எழுந்து, யவனர்களாலே புலிச்சங்கிலிவிட்டு அழகிதாக அமைக்கப்பட்ட இல்லின் உள்ளே விளக்கங்காட்டப்படச் சென்று, வலிய கயிற்றால் இடையிலே திரையை மறித்து வளையக்கட்டி முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் இரண்டாக வகுக்கப்பட்ட பள்ளி அறையிற் போய்ப் படுக்கையில் அமர்ந்திருக்கின்றான்; அங்ஙனந் தலைவன் பள்ளி கொள்ளும் உள்ளறையின் முன்திரைக்குப் புறத்தேயுள்ள வெளியறையிலே சட்டையிட்ட மிலேச்சரில் ஊமைகள் தலைவன் பள்ளியறையைச் சூழ்ந்து இருக்கின்றார்கள்; அரசனோ நாளைக்குச் செய்ய வேண்டும் போரினை மிகவிரும்பி அதனாற் படுக்கையில் உறக்கங் கொள்ளானாய் முன் நாட்களில் நடந்த போரிற் புண்பட்ட யானைகளை நினைந்தும், யானையை வெட்டியுந் தமக்கு வெற்றியினை யுண்டாக்கியும் இறந்துபோன போர்மறவரை நினைந்தும், அம்பு அழுந்திய வருத்தத்தால் தீனிகொள்ளாமல் காதைச் சாய்த்துக் கொண்டு கலங்குங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/90&oldid=1578940" இலிருந்து மீள்விக்கப்பட்டது