உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

61

வளைவாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு இடையிலே அரசனுக்கென்று வண்ணத்திரையினால் வேறொரு வீடு வகுக்கப்பட்டிருத்தலும், அவ் வீட்டின் உள்ளே பெண்கள் பலர் கையில் விளக்கு ஏந்தி நிற்றலுங், குதிரை முதலியவற்றின் கழுத்திற் கட்டிய மணியோசை இரவில்

அடங்கிவிட்டதும்,

மெய்க்காப்பாளர் அரசனிருக்கையைச் சுற்றிக் காவலாகத் திரிதலும், பொழுதறிவோர் கொப்பரை நீரில் இட்ட நாழிகை வட்டிலைப் பார்த்து வந்து அரசன் எதிரிலே இடையாமம் ஆயிற்று என்றலும், யவனர்களாற் புலிச் சங்கிலி விட்டு மிக அழகிதாக வகுக்கப்பட்ட பள்ளியறையுள் அவர்கள் விளக்குக் காட்டச்சென்று அரசன் பள்ளி கொண்டிருத்தலும், அப்போது ஊமை மிலேச்சர் பள்ளியறையைச் சுற்றிக் காவலாக இருத்தலும், படுக்கைமேல் உள்ள அரசன் மறுநாட் போரை விரும்பும் உள்ளத்தோடு உறக்கம் பெறானாய், முன்னாட் போரிற் புண்பட்ட யானை குதிரைகளையுஞ் செஞ்சோற்றுக் கடன் கழித்து இறந்தொழிந்த அரிய போர்மறவரையும் நினைந்து வருந்தி ஒரு கையை மெத்தையின்மேலும் மற்று ஒரு கையைத் தலையின் கீழும் வைத்துப் படுத்திருத்தலும், தலைமகள் ஏழடுக்கு மாளிகையில் தன் கணவன் வருகையை நினைந்து பிரிவின் துன்பத்தை ஆற்றிக்கொண்டு பாவையின் கையிலுள்ள விளக்கானது எரிய மாளிகையின் கூடல்வாயிலிலே வந்துவிழும் நீர்த்திரள் ஒலிப்ப மயில்போற் படுத்திருத்தலும், அப்போது தலைவன் தன் றேரினை விரைவாகச் செலுத்திக் கொண்டு காட்டிலே வருதலும் நாம் நேரே காண்கின்றது போலவும், ஓவியம் எழுதி நங்கண்ணெதிரே காட்டுகின்றது போலவும் மிக்க அழகுடன் சொல்லப் படுதல் காண்க.

இனி, இவ்வாசிரியர் தாம் புனைந்துரைக்கும் பொருள் களின் உள்ளே நுழைந்து அவற்றை விரிவாகப் புனைந்துரைக் கின்றாரென்பதும் ஈண்டு அறியற்பாற்று; இவ்வியற்கை பத்துப்பாட்டுக்கள் இயற்றிய புலவர் எல்லாரிடத்தும் பொதுவாகக் காணப்படுவதொன்றாகும். ஆயினும், இவரை யொழிந்த ஏனைப்புலவரெல்லாரும் நம் உள்ளத்தின் கற்பனை யுணர்வு தளர்வடை யா வண்ணம் விரித்துப் புனைந்து சொல்லுதற்கு இசைந்த நன்பொருள்களையே விரித்துரைக் கின்றனர்; மற்று இவரோ புனைந்துரை விரிப்பதாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/94&oldid=1578945" இலிருந்து மீள்விக்கப்பட்டது