பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் "மலரும் உள்ளம் இரண்டாம் தொகுதி ஒரு நாள் என் கைக்கு வந்தது. காரணம் அறியாமல் படிக்கத் தொடங்கிக் குழந்தை போல் மகிழ்ந்து கொண்டிருந்தேன். திரு. அழ. வள்ளியப்பாவின் கடிதம் என் கைக்கு வந்தது. அதில் அணிந்துரை வேண்டும் என்று குறித்திருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குழந்தை இலக்கிய உலகத்தில் நன்கு அறிமுகமாகிப் புகழுடன் விளங்கி வரும் கவிஞர், ஏன் இப்படி அணிந்துரை கேட்கிறார் என்று எண்ணினேன். நாடறிந்த இவருக்கு ஒர் உரையும் தேவை இல்லை. எனினும், நானும் இந்த நூலைப் படித்தேன் என்பதற்குச் சான்றாக இதனை எழுதுகிறேன். பெரியவர்களின் இலக்கியத்தைக் குழந்தைகள் படிக்க முடியாது. ஆனால், குழந்தைகள் இலக்கியத்தைப் பெரியவர்களும் படிக்க முடியும். என்ன காரணம்? அந்தக் குழந்தை மனம், பெரியவர்களான பிறகும் விட்டு நீங்குவது இல்லை. விரும்பிய போதெல்லாம் அது, திரும்பி வருகிறது. உடல் மூத்து விட்டால், அதற்கு இளமை திரும்ப வருவதில்லை. ஆனால், உள்ளத்திற்கு மூப்பின் அனுபவம் நிரம்பிய போதிலும், இளமை உணர்ச்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன. குழந்தை உலகம், கவலை குறைந்த உலகம். இயற்கை யோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு மிகுதி. நத்தையம்மா என்ற பாட்டில், நத்தையோடு பேசும் குழந்தை அந்த உண்மையைப் புலப்படுத்துகிறது. . . . 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/8&oldid=860138" இலிருந்து மீள்விக்கப்பட்டது