பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மறைத்திரு. எஸ். ஜெரோம் டி செளசா முற்பிறப்பில் நான் செய்த தவப் பயனால் என் கல்லூரிப் படிப்பு திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி யில் தொடங்கியது. அக்கல்லூரியில் பெற்ற ஒழுங்கு முறை இரண்டாவது இயற்கைபோல் என்னுள் படிந்து இன்றளவும் நிலை பெற்று நிற்கின்றது. இந்த ஒழுங்கு முறை என் வாழ்வு முழுதும் ஒளிகாட்டிக் கொண்டு வந்தமையால், பெரியோர்களின் துணையின்றி, பரிந்துரை செய்ய ஒருவருமின்றி, என் உழைப்பினாலேயே ஒருவகை யில் ஏதோ முன்னேற்றப்பாதையில் நடந்து வந்து ஒய்வு பெற்றுப் 13 ஆண்டுகள் கழித்து என் வாழ்க்கை அமைந் தது பற்றிப் பின்னோக்கிச் சிந்திக்கின்றேன். இதனால் சில நினைவுகள் மலர்கின்றன: "தந்தையொடு கல்வி போம்' , 'தாதா எனில் கல்விதானகலும்’ என்ற ஆன்றோர் வாக்குகளின்படி தந்தையில்லாவிடில் கல்வியில் முன்னேற்றம் இல்லாது போய்விடும். மூன்றாண்டுப் பருவத்தில் தந்தையை இழந்த என் நிலை என்ன ஆகும்? அதுவும் இளமையில் வறுமையும் சேர்ந்து கொண்டால் சொல்ல வேண்டா. வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்’ (கவி-10) என்ற கவித்தொகை அடியை நினைத்தாலே இவ்வுண்மை தெளிவாகும். பாலை நிலத்து மரத்தின் கிளைகள் வாடியிருப்பதற்கு இளமையில் வறுமையால் வாடும் ஒருவனோடு ஒப்பிடுகின்றார் பாலைபாடிய பெருங்கடுங்கோ. யான் இளமையில் பட்ட துன்பங்களைப் பன்னியுரைக்கில் பாரதமாம்.