பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் 35 மான தோற்றம். அழகான முறையில் தென்கலைத் திருமண்காப்பு தீட்டப்பெற்று அறிவொளி வீசும் திருமுக மண்டலம், எவரையும் இன்முகத்துடன் வரவேற்கும் உயரிய பண்பு; இவை பன்மொழிப் புலவரின் புறத் தோற்றம். அகத் தோற்றத்தில் அடங்கிக்கிடக்கும் இவர்தம் ஆழ்ந்த இலக்கண இலக்கியப் புலமை, உயரிய பண்புகள் இவற்றை மேலோட்டமாக அறிய முடியாது. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு (குறள்-783) என்ற வள்ளுவர் வாக்குப்படி இவை இவருடன் பழகுந் தோறும் வெளிப்படுபவை. ஆயினும், ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே -வெற்றி வேற்கை-34 என்ற அதிவீரராம பாண்டியனின் பொன்மொழிக் கிணங்க இவருடன் அடியேன் கொண்ட உறவு ஆன்ம உறவாக வளர்ந்தது. முதல் சந்திப்பே ஆர்வத்துடன் அறிவியல் பயின்ற அடியேனைத் தமிழ்த் தாயின் மடியில் கிடந்து தமிழமிழ்தம் பருகும் வாய்ப்பாக அமைந்து விட்டது; துறையூரிலிருந்தவரை இலக்கியக் கழகத் தொடக்க விழா, பள்ளி ஆண்டு விழா. இரண் டிற்கும் இடையில் பல சிறப்புச் சொற்பொழிவுகள் என்று பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு பெரும் பெரும் புலவர்களைத் தருவித்துப் பல இலக்கியச் சொற் பொழிவுகளை அமைத்துத் தமிழமிழ்தம் பருகினேன். மாணாக்கர்கள், தோழ ஆசிரியர்கள், ஊர்ப்பெரு மக்கள் இவர்களையும் பருகச் செய்து மகிழ்வித்தேன். நான் துறையூரை விட்டுக் காரைக்குடி சென்ற பிறகு இத்தகைய இலக்கிய நிகழ்ச்சிகள் துறையூரில் அரியனவாயின. நான் இருந்தவரை துறையூரில் தமிழ் இலக்கிய வெள்ளம் அடிக்கடிக் கரை புரண்டோடி வந்தது.