பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்) மலைநாட்டுத் திருப்பதிகளுக்கு நம்மை அழைத்துக் கொண்டு போவதுபோல் பாசாங்கு செய்யும் இவ்வாசிரியர், உண்மையில் வைணவ சமய தத்துவங்கள், பக்தி நிலைகள், மரபுகள் - இவற்றையெல்லாம் நமக்குச் சுற்றிக் காட்டி விடுகின்றார். வீரசைவ சமயத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர், ஆனாலும் வைணவத்தைப்பற்றிப் பேசும்போதும் எம்பெருமானைச் சேவித்து அவனுடைய பரம கலியான குணங்களை எடுத்து விரித்துரைக்கும் போதும், அதிசயிக்கத்தக்க ஈடுபாட் டோடும் விரிந்து பரந்த மனப்பாங்கோடும், தன்னையே வைணவத்தோடு இரண்டும் ஒன்றும் அறக் கரைத்துக் கொள் கின்றார். ஆசிரியருடைய நினைவும் சொல்லும் ஒருமைப் பட்டிருக்கையாலே இந்த அரிய சாதனை அவருக்குக் கை வந்திருக்கின்றது. மெய்ப்பொருளோடு ஊடாடுவதற்கென்று ஒவ்வொரு சமயத்திலும் பல உத்திகளை வகுத்து வைத்திருக்கின்றார்கள். ஆனால், வைணவ ஞானிகள் வகுத்து வைத்திருக்கும் உத்திகள் தனிச்சிறப்புடையவை. மூர்த்திகளை வெறும் அடையாளப் பொருள்களாகக் கொள்ளாமல், ஒவ்வொரு மூர்த்தியும் இறைவன் எடுத்த அர்ச்சாவதாரம் என்று கொண்டு, மெய்ப்பொருளோடு உறவாடும் போது, பக்திக் கடல் மடை திறக்கின்றது. மெய்யுணர்வு பெருக்கெடுத்தோடு கின்றது.