பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அனந்தபுரத்து அண்ணலார் அண்மையில் திருமணம் செய்து கொண்ட நங்கை யொருத்திக்குத் தான் பிறந்த இல்லத்தை விட்டுத் தன் கணவன் இல்லத்தை அடையும் நாள் நெருங்கி வருகின்றது. சில நாட்கள் முன்பிருந்தே அவள் தன்னுடன் நெருங்கிப் பழகிய நண்பர்களின் வீடுகள்தோறும் சென்று விடைபெறுங் காட்சியை இன்றும் நாம் காண்கின்றோம். அங்ங்னமே நம்மாழ்வாரும் தான் பரமபதம் செல்லும் நாள் அண்மையி லுள்ளது என்பதையுணர்ந்து பல திவ்விய தேசங்களில் புகுந்து ஆங்காங்குள்ள எம்பெருமான்களிடம் விடைபெறு கின்றார். திருமோகூர் எம்பெருமானைச் சரணம் அடைந்து' விடைபெற்ற ஆழ்வார் அனந்தபுரம் செல்லத் திருவுள்ளங் கொண்டு புறப்படுகின்றார். அந்த அனந்தபுரம் செல்லு கின்றோம் இன்று நாம், நாகர்கோவிலிலிருந்து பேருந்தில் புறப்படுகின்றோம். திருநாட்டிற்குச் செல்லும் ஆன்மா கதிரவனிடமுள்ள ஒரு துவாரத்தில் நுழைந்து செல்வதைப் போலவே, மலை நாட்டிற்குச் செல்லும் நாமும் மலை நாட்டின் நுழைவாயில் போன்றிருக்கும் நாகர்கோவிலைக் கடந்து செல்லுகின்றோம். - பேருந்து திருவனந்தபுரத்தை நோக்கிச் செல்லுங்கால் எம்மருங்கும் அடர்ந்த தோப்புக்கள், ஓங்கி உயர்ந்த மலைக் குன்றுகள், பாங்குடன் திகழும் மணல் மேடுகள் பூங் கொத்துகள் குலாவும். குளிர் சோலைகள், குறுக்கும் நெடுக்கு மாக வலைப்பின்னல் போன்றுள்ள பாய்ந்து செல்லும் சிற்றாறுகள், கால்வாய்கள் இவற்றைக் காண்கிறோம். 1. திருவாய் 10. 1. .