பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

மரபுக்கவிதை, நோக்கிலும் கருத்திலும் கற்பனையிலும், பாடுபொருளிலும், சொல்லும் விதத்திலும் ஒரே மாதிரியாகிப் போய்த் தேக்கநிலை பெற்றுவிட்டது என்று சொல்லப்படுவது வழக்கம். இந்தக் குறையைப் போக்குவதற்காகவே, இலக்கணத்தை ஒதுக்கி விட்டு, மரபு மீறலாக, புதுக் கவிதை முயற்சி எடுத்தாளப்படுகிறது என்றும் கூறப்பட்டது. காலப்போக்கில், புதுக்கவிதை ஆர்வலர்களும் மரபுக்கவிதைவாதிகள் செய்த தவறு களையே செய்து கொண்டிருப்பதனால், புதுக் கவிதையும் ஒரு தேக்க நிலை அடைந்துள்ளது.

கவிதையானாலும் சரி, மற்றும் சிறுகதை, நாவல் எதுவாயினும் சரியே; தகுதியும் தரமும் பெற்று நல்ல படைப்பாக விளங்கவேண்டுமானால், அதன் படைப்பாளி நல்ல வாழ்க்கை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாழ்க்கை பற்றி அவருக்கென்று தனித்த பார்வை வேண்டும். மற்றவர் களைப் போல ஒன்றை உருவாக்க முற்படாமல், தனக்கென்று ஒரு தனி நோக்கிலும் போக்கிலும் படைக்க முயல வேண்டும். சொல்லில் உயிர்ப்பும் உணர்வும் சேர்க்க வேண்டும். உள்ளத்தில் உண்மையான கனல் இருந்தால், அவரது படைப்பிலும் ஒளி சேரும். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்: என்பது பாரதி, வாக்கு

இந்த எண்ணங்களின் பின்னணியோடு, புதிதாக வெளிவந்திருக்கும் 'காலடியில் தலை’ எனும் கவிஞர் மலையருவியின் கவிதைத் தொகுப்பைச் சிறிது ஆராயலாம்.