பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

13



குகையினுள்ளும் நிலவின் ஒளி புகுந்தது!

புலியிருந்த இடமல்லவோ இது. இப்பொழுது, வெற்றிடமாய்க் காட்சியளிக்கிறதே.

புலி எங்கே?

எங்கே போயிருக்கும்?

அதோ, காட்டில் கேட்கும் அரவம், அக் கேள்விக்கு விடை கூறுகிறது. அது, மீண்டும் வேட்டைக்குக் கிளம்பி விட்டது. காடே நடுங்குகிறது..

குகையில், புலியைக் காணவில்லை என்றால், மீண்டும் வேட்டைக்குப் போய்விட்டது என்பதே பொருள். இது புலியின் கதை!

புலியைப் போன்றவன் வீரன். புலியின் கதைதான் வீரன் கதையும்.

வீரனை ஈன்றெடுத்த அன்னை அதனை நன்கறிவாள். அவ்வீரப் புலியைச் சுமந்தது அவள் வயிறுதானே? அப்புலி உறங்கிய குகையும் அதுதானே?

அத்தகைய வீரத்தாய் ஒருத்தியை ‘உன் மகன் எங்கே?’ என்று கேட்டாள் பக்கத்து வீட்டுக்காரி. அவள் என்ன சொல்வாள்?

“குகையினின்றும் புலி கிளம்பி விட்டது. அது பகைவர்களை வேட்டையாடும் போர்க்களத்திற்குப் போயிருக்கிறது” என்றுதான் கூறினாள்.