பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மெய்யெழுத்தில் வல்லெழுத்து ஆறும் மெல்லெழுத்து ஆறும் முறையே இனமாம். அதாவது ககரத்திற்கு ஙகரமும்; சகரத்திற்கு ஞகரமும்; டகரத்திற்கு ணகரமும், தகரத்திற்கு நகரமும், பகரத்திற்கு மகரமும்; றகரத்திற்கு னகரமும் ஒன்றுக்கொன்று இனமாம்.

இடையெழுத்தாறும் ஓரினம். அதற்கு வேறு இனம் கிடையாது.

சூத்திரம்: “ஐ ஒள இ உச் செறிய முதல் எழுத்து இவ்விரண்டு ஓரினமாய் வரல் முறையே”.

5. மாத்திரை (குறில், நெடில், மெய், ஆய்தம்)

“ஒன்று, இரண்டு” என்று சில பொருள்களை எண்ணி அளக்கின்றோம். “படி, ஆழாக்கு” என்று சில பொருள்களை முகந்து அளக்கின்றோம். “பலம், வீசை” என்று சில பொருள்களை நிறுத்து அளக்கின்றோம். "அடி, முழம்" என்று சில பொருள்களை நீட்டி யளக்கின்றோம். இவை போல எழுத்துக்களை அளக்கும் கருவியும் இருக்கின்றது. அதுவே மாத்திரையாம். இது மிகச் சிறிய கால அளவாகும்.