பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சொல் (பெயர்ச்சொல்)

1. இடுகுறிப் பெயர்

மரம், கல் என்ற பெயர்கள் பொருட்களின் பெயர்கள். இப்பெயர்கள் இப்பொருட்களுக்கு எப்படி ஏற்பட்டன என்று தெரியவில்லை. நமது பெரியோர்களால் அப்பொருள்களுக்கு அப்பெயர்கள் இடப்பெற்றுத் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன. இவ்வாறு வருவது இடுகுறி.

“யாதொரு காரணமும் இன்றி நமது பெரியோர்களால் பொருள்களுக்கு இடப்பட்டு வழங்கிவருகிறபெயரே இடுகுறிப்பெயராம்.”

2 காரணப் பெயர்

வளையல், பறவை முதலியவைகள் பொருள்களின் பெயர்கள். அப்பொருள்களுக்கு இப்பெயர்கள் எவ்வாறு ஏற்பட்டன என்று தெரிகின்றது.

வளைந்து இருக்கும் காரணத்தால் வளையல் என்று அப்பொருளுக்குப் பெயர் அமைந்தது. பறக்கும் காரணத்தால் பறவை என்று அப்பொருளுக்குப் பெயர் அமைந்தது. இவ்வாறு வருவது காரணப் பெயர்.

“யாதானும் ஒரு காரணத்தால் வழங்கும் பெயரே காரணப் பெயராம்.”