பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 மாணிக்கவாசகர்



5. கைம்மாறு கொடுத்தல்

கைம்மாறு கொடுத்தல் என்பது, தன்னைச் சிவனிடத்தில் கொடுத்தல் என்று பொருள்படும். தன்னை முன்னம் நினைக்கத் தந்துதவிய இறைவனுக்கு ஆன்மா தன் ஆற்றலற்ற நிலையினை யுணர்ந்து தன்னையே கைம்மாறாகக் கொடுத்து இறைவன் அருள்வழி அடங்கியொழுகும் நன்றியறிவினைப் புலப் படுத்தும் முறையிலமைந்தது இப்பதிகம். ஆதலின் இது கைம்மாறு கொடுத்தல் என்ற பெயரினைப் பெறுகின்றது. இறைவன் தமக்குப் புரிந்த பேரருளுக்குக் கைம்மாறாகத் தாம் ஒன்றும் செய்ய இயலாத எளிமை நிலையினை நினைந்திரங்கிய அடிகள் தம்மையே கைம்மாறாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிப் போற்றுகின்றார்.

இறைவன் தமக்குச் செய்த கைம்மாறு வேண்டாக் கருணைத் திறத்தை அடிகள் "என்னுளக் கருவை" (1), "தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்"(2), "ஆட்கொண்ட கூத்தனே'(3), "எனை அன்பரில் கூய்ப்பணி கள்ளும்" (6), "யாவரும் காணவே, பட்டிமண்டபம் ஏற்றினை"(9) என்பன போன்ற பாடற்பகுதிகளால்சொல்லிச் சொல்லி இன்புறுகின்றார். இவற்றிற்குக் கைம்மாறு தேடும் முறையில், "கிற்றிலேன்" (1) எனவும், "அறிவனோ அல்லனோ" (10) எனவும் கூறித் தமது இயலாமையையும், செய்ந்நன்றியறிதலைக் கூட மேற்கொள்ள முடியாமையையும் விளக்கி அருள்கின்றார். அன்றியும், அவர் செய்த உபகாரத்துக்கு மாறாகக் "கண்டும் கண்டிலேன்" (2) எனவும், "கழல் கண்டும் பிரிந்தனன்" (8) எனவும் தம் தவறுகளையும் உணர்த்துகின்றார். 'எற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங், கூற்ற மன்னதோர் கொள்கை என் கொள்கை" (5) என்று அபகாரம் செய்ததையும் அறிவிக்கின்றார்.