பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறையில்-திருச்சதகம் i07



திருவருள். பாசத் தொடர்புகளை அறவே போக்குவதாய்ச் சிவப்பேற்றுக்குக் காரணமாய் உள்ள இறைவனது திருவருள் பதியப்பெற்ற உயிர் முதல்வனது பெருங் கருணைத்திறமாகிய அதனையே நினைந்து போற்றும் முறையில் இரங்கி வேண்டுவதாக அமைந்துள்ள இத்திருப்பதிகம் காருணி யத்திரங்கல் என்ற திருப்பெயரைப் பெறுகின்றது. "உம்பர் தந்தருளு" (4) "தருக நின்பாதம்" (8) என்ற தொடர்கள் இதனை அரண் செய்யும். தம்முடைய இடர்களை யெல்லாம் விரைந்து களைதல் வேண்டும் என்னும் துடி துடிப்புடன் இறைவனது பேரருளை எதிர்நோக்கிப் போற்றும் முறையீடுகளாக இப்பதிகத் திருப்பாடல்கள் அமைந்துள்ளன. பாசநீக்கத்திற்குப் பின்னரும் சிவப் பேற்றுக்கு முன்னரும் வேண்டற்பாலது இத்திருவருள் வீழ்ச்சி. இத்திருவருள் வீழ்ச்சியாகிய அருட்பேற்றைத் திருவுளங்கொண்டே அடிகள் போற்றி என்னும் பொருள்சேர் மறைமொழியினைத் திருப்பாடல்கள்தோறும் பன்முறை ஒதிப் போற்றுவர். போற்றி காத்தருள்க, வணக்கம், இந்த இரு பொருளும் பொருந்தும் இடம் நோக்கிக் கொள்ளப் படும். அடிகள் ஆண்டவனை மன்றாடி வேண்டும் திருக்குறிப்புகள் பாடல்கள் தோறும் பரவியுள்ளதைக் கண்டு மகிழலாம். இப்பதிகத்தின் இரண்டு பாடல்களில் ஆழங்கால் படுவோம்.

  போற்றியோ நமச்சி வாய
     புயங்கனே மயங்கு கின்றேன் 
  போற்றியோ நமச்சி வாய
     புகலிடம் பிறிதொன் றில்லை 
  போற்றியோ நமச்சி வாய
     புறமெனைப் போக்கல் கண்டாய் 
  போற்றியோ நமச்சி வாய
        சயசய போற்றி போற்றி (2)