பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 மாணிக்கவாசகர்



யிருந்த புத்த குரு மிகவும் வெகுண்டு திரிபிடகத்தையருளிய புத்த தேவனாகிய எங்கள் தலைவனையன்றி வேறொரு தெய்வமும் உண்டோ? உண்டாயின் திருத்தில்லையை அடைந்து அங்குள்ளவர்களை வாதில் வென்று பொன்னம் பலத்தை போதிநிழல் பெருமானுக்குரிய புத்த விகாரமாக மாற்றுவேன்' என்று சூளுரைக்கின்றான். அத்துடன் நில்லாது புத்தர் குழுவுடன் தில்லையை நோக்கிப் புறப்படுகின்றான். ஈழவேந்தனும் தன் ஊமை மகளை அழைத்துக் கொண்டு தில்லைப்பதியை அடைகின்றான்.

முன்னதாகவே சென்ற புத்த குரு சிதம்பரத்தை யடைந்து திருப்புவீச்சரத்திருக்கோயிலில் தங்கியிருக்கின்றான். புறச்சமயத்தானாகிய அவனைக் கண்ட நகர மக்கள் தில்லையை விட்டு அகலுமாறு கடிந்துரைக்கின்றனர். தான் சோழ மன்னனுக்கெதிரில் சைவச் சமயம் மெய்ச் சமயம் அன்று எனத் தெரிவித்து தன் சமயமாகிய பெளத்த சமயமே மெய்ச்சமயம் என்றும்,புத்ததேவனே தெய்வம் என்றும் நிலை நிறுத்தாமல் அவ்விடத்தைவிட்டு அகல்வதற்கில்லை எனக் கூறுகின்றான். இதனைக் கேட்டோர் தில்லை மூவாயிர வரிடம் இச்செய்தியைத் தெரிவிக்கின்றனர். அவர்கள் அங்கு வந்து புத்த குருவை நோக்கி 'நீ இங்ங்னம் வந்து எங்கட்குத் தொல்லை தருவது ஏன்? என்று வினவுகின்றனர். அதற்கு அவனும், நீங்கள் வேதசாத்திர அளவைகளைக் கொண்டு துமது தெய்வமே தெய்வம் என்று நிலைகாட்டுவீராயின், யான் அதனை மறுத்துப் புத்தனே கடவுள் என நிலை நிறுத்துவேன்' என்கின்றான். புத்தனை வாதில் வென்று போக்குதலே முறை எனக் கருதிய தில்லைவாழ் அந்தணர்கள் சோழ மன்னனுக்குத் திருமுகம் எழுதி அனுப்புகின்றனர்; சிவனடியார்கட்கும் ஒலையனுப்புகின்றனர்.

அன்று இரவு வைகறைப்பொழுதில் தில்லைப் பெருமான் சடை முடியும் முழுநீறு பூசிய திருமேனியும் உடையராய்க்