பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ப்பும் 9


 என்பது வள்ளுவம் அன்றோ? மணிவாசகரின் வாழ்க்கை வள்ளுவரின் உண்மையுடன் ஒட்டியே செல்லுகின்றது.

வாதவூரடிகள் வரலாற்றை அறிவிக்கும் தமிழ் நூல்கள்:

(1) செல்லி நகர் பெரும்பற்றப் புலியூர் நம்பி பாடிய திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் (13-ஆம் நூற்றாண்டு), (2) பரஞ் சோதி முனிவர் இயற்றிய திரு விளையாடற் புராண்ம் (17-ஆம் நூற்றாண்டு), (3) கடவுண் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம், (4)திருவுத் தரகோச மங்கைப் புராணம், (5) கடம்பவன புராணம், (6) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய திருப் பெருந்துறைப் புராணம் முதலிய தலபுராணங்களாகும்.

சிலவற்றில் சுருக்கமாகவும், சிலவற்றில் விரிவாகவும் அடிகளாரின் வரலாறு விளக்கப்பெற்றுள்ளது. இவை யாவும் அடிகளார் வாழ்ந்த காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்த் தோன்றியவையாதலின் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறும்முறையில் இவற்றிடையே சிற்சில வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. ஒவ்வொருவரும் தம் கற்பனையை விரித்துக் கொண்டே போயுள்ளனர். தவிர, நம் நாட்டில் ஆசிரியரே தம் வரலாற்றை எழுதிவைக்கும் பழக்கமும், அக்காலங்களில் வாழும் வேறு சிலர் இப்பெரியார்களைப் பற்றிய குறிப்புகளையாவது எழுதி வைக்கும் மரபும் இல்லாதது பெருங்குறை. ஆயினும் அடிகளாரின் நூல்களில் இலைமறைகாய்களாக சில குறிப்புகள் காணப்பெறுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வரலாற்றுணர்ச்சி நம்மவரிடம் தோன்றியது; இன்று அது வளர்ந்தும் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/27&oldid=1012157" இலிருந்து மீள்விக்கப்பட்டது